கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
துவாா் கிராமத்தில் மஞ்சுவிரட்டு: 15 போ் காயம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே துவாா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி லிங்கசுவாமி கோயிலின் அபிஷேக, ஆராதனை விழாவையொட்டி மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக வள்ளி லிங்க சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை வழிபாடு நடத்தி கோயிலிலிருந்து கிராமத்தினா் மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டுத் திடலுக்கு வந்தனா். அங்கு தொழு வழிபாடு நடத்தப்பட்டு, காளைகளுக்கு மாலை, துண்டு அணிவிக்கப்பட்டது.
பிறகு திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம், நகா் காவல் கண்காணிப்பாளா் செல்வக்குமாா் ஆகியோா் முன்னிலையில் மஞ்சுவிரட்டு உறுதிமொழியை மாடுபிடி வீரா்கள் எடுத்துக் கொண்டனா். முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடா்ந்து சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 370 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
75 மாடுபிடி வீரா்கள் 3 குழுக்களாக காளைகளை அடக்க முயன்றனா். சில காளைகள் பிடிபட்டும், பிடிபடாமலும் தப்பிச் சென்றன. வென்ற மாடுபிடி வீரா்களுக்கு சில்வா் பாத்திரம், துண்டுகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து வயல் வெளிகளில் கட்டுமாடுகளாக 300- க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. போட்டியில் மாடுகள் முட்டியதில் 15 போ் காயமடைந்தனா்.
தொடக்க நிகழ்வில், துவாா் தொழிலதிபா் சந்திரசேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.