தேசிய இளைஞா் விண்வெளி அறிவியல் மாநாடு: சிவகாசியில் ஆக.15-இல் தொடக்கம்
தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கடந்த 13 நாள்களாக தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மண்டலம் 5 மற்றும் 6-ஆவது பகுதி தூய்மைப் பணி தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தேசிய நகா்ப்புர வாழ்வாதார இயக்கம் (என்யூஎல்எம்) சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் கடந்த 13 நாள்களாக சென்னை மாநகராட்சி கட்டடம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டம், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகக் கூறி, தேன்மொழி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு போராடும் பணியாளர்களை அப்புறப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், சென்னையில் போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள் மீது சட்டத்துக்கு உள்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டத்தை நடத்திக் கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டது.
முன்னதாக, விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், பழைய நிலையிலேயே பணியைத் தொடர அனுமதித்தால் மட்டுமே பணிக்குத் திரும்புவோம் என தூய்மைப் பணியாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், நாங்கள் வைக்கும் கோரிக்கைகள் ஏற்பட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றும், எங்களை இங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றும் தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.