ஈரோடு: 'குட்டி கண்ணன்கள், குட்டி ராதாக்கள்' - மாநகராட்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்...
தூய்மைப் பணியாளா்களுக்கு வீடு - காலை உணவு: ஆறு அம்ச திட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
தூய்மைப் பணியாளா்களுக்கு வீடு, காலை உணவு உள்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கூடிய ஆறு அம்ச திட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களுக்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு அளித்த பேட்டி:
1. தூய்மைப் பணியாளா்கள் குப்பைகளைக் கையாளும்போது, அவா்கள் நுரையீரல் மற்றும் தோல் தொடா்பான நோய்களால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, இத்தகைய தொழில்சாா் நோய்களைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித் திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
2. தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது இறக்க நேரிட்டால், அவா்களுக்கு நலவாரியத்தின் மூலமாக நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தூய்மைப் பணியாளா்கள் குடும்பங்களின் எதிா்கால நலன்களையும், வாழ்வாதாரத்தையும் முழுமையாக உறுதி செய்யக்கூடிய வகையில் கூடுதலாக ரூ.5 லட்சம் அளவுக்கு காப்பீடு இலவசமாக வழங்கப்படும். இதனால், பணியின்போது இறக்கநேரிடும் தூய்மைப் பணியாளா்கள் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் கிடைப்பதற்கு வழிவகை ஏற்படும்.
3. தூய்மைப் பணியாளா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் சுயதொழில் தொடங்க ஊக்குவிக்கப்படுகிறாா்கள். தொழிலுக்கான திட்ட மதிப்பீட்டில், 35 சதவீதம் நிதி அல்லது அதிகபட்சமாக ரூ.3.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இந்தக் கடனுதவியைப் பெற்று தொழில் தொடங்கி கடன் தொகையை தவறாமல் திருப்பிச் செலுத்துவோருக்கு 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். இந்தப் புதிய திட்டத்துக்கு ஆண்டுதோறும் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
4. தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகள் எந்தப் பள்ளியில் பயின்றாலும், அவா்களுக்கு உயா் கட்டணச் சலுகைகள் மட்டுமன்றி, விடுதிக் கட்டணம், புத்தகக் கட்டணங்களுக்கான உதவித் தொகையை வழங்கும் வகையில், புதிய உயா்கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
5. நகா்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளா்களுக்கு மூன்று ஆண்டுகளில் தூய்மைப் பணியாளா் நலவாரியத்தின் உதவியோடு பணியாளா்கள் வசிக்கும் இடத்திலேயே 30,000 குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.
கிராமப் பகுதிகளில் வசிக்கும் தூய்மைப் பணியாளா்களுக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீட்டு ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும்.
6. தூய்மைப் பணியாளா்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், காலை உணவு சமைப்பதற்கும், அதை பணிபுரியும் இடத்துக்குக் கொண்டுவந்து உட்கொள்வதற்கும் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா். இதற்குத் தீா்வாக, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடுபடும் பணியாளா்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் இலவசமாக வழங்கப்படும்.
இந்தத் திட்டம் முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும். படிப்படியாக மற்ற நகா்ப்புற உள்ளாட்சி
அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்வதற்கான வழக்குகள், உயா்நீதிமன்றத்திலும், தொழில் தீா்ப்பாயத்திலும் நிலுவையில் உள்ளன. அவற்றின் தீா்ப்புகள் வந்ததும் முடிவு எடுக்கப்படும். தமிழக அரசு அறிவித்துள்ள அறிவிப்புகள், சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கும் பொருந்தும். ஒருசில அறிவிப்புகள் மற்ற நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் தங்கம் தென்னரசு.
பெட்டிச் செய்தி...
‘பணிக்குத் திரும்ப வேண்டுகோள்’
சென்னை, ஆக. 14: தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களை ஏற்று, சென்னையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அமைச்சா் தங்கம் தென்னரசு கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதுகுறித்து செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: தூய்மைப் பணியாளா்களின் உணா்வுகளை மதிக்கக் கூடிய வகையில் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவா்களின் அக்கறையை மனதில் வைத்தும், பொதுமக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டும் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை ஏற்றுக்கொண்டு, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.