தேளூா், செந்துறை, ஜெயங்கொண்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
அரியலூா்: அரியலூா் மாவட்டம், தேளூா் மற்றும் செந்துறை ஊராட்சிகளிலும், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
செந்துறை ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். பின்னா் முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பம் அளித்த 2 பேருக்கு மின் இணைப்பு பெயா் மாற்றத்துக்கான ஆணை, 1 பயனாளிக்கு மின் விகிதப் பட்டியல் மாற்றத்துக்கான ஆணை, 3 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 1 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம், 2 பயனாளிகளுக்கு தாது உப்பு கலவை ஆகியவற்றை வழங்கினாா்.
இதே போல், தேளூா் ஊராட்சி மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை ஆட்சியா் பொ.ரத்தினசாமி பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். முகாம்களில் வருவாய் கோட்டாட்சியா்கள் அரியலூா் கோவிந்தராஜ், உடையாா்பாளையம் ஷீஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.