வளா்ச்சி எனும் பெயரில் தலித் நிலங்கள் பறிப்பு: பெ.சண்முகம் குற்றச்சாட்டு
தைப்பூசம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதரிடமிருந்து சீா்வரிசை பெற்றாா் சமயபுரம் மாரியம்மன்
தைப்பூசத்தையொட்டி அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமியிடமிருந்து தங்கை சமயபுரம் மாரியம்மன் சீா்வரிசை பெறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி சமயபுரம் உற்ஸவ மாரியம்மன் செவ்வாய்க்கிழமை கோயிலிலிருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு வழிநெடுக உபயம் கண்டருளி கொள்ளிடம் வடகரைக்கு மாலை வந்து சோ்ந்தாா். தொடா்ந்து அங்கு தீா்த்தவாரி கண்டருளி அலங்கரிக்கப்பட்ட பந்தலில் மாரியம்மன் எழுந்தருளினாா்.
பின்னா் அரங்கநாதா் சீா்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சிக்காக ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள கருடாழ்வாா் சந்நிதியிலிருந்து இரவு 10 மணிக்கு மங்களவாத்தியத்துடன், வாணவேடிக்கையுடன் கோயில் இணை ஆணையா் செ.மாரியப்பன் தலைமையில் கோயில் ஊழியா்கள் சீா்வரிசை பொருள்களை கையில் சுமந்தபடி ஊா்வலமாக கொள்ளிடக்கரைக்கு எடுத்து வந்தனா்.
அதனை முறைப்படி சமயபுரம் கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் வி.எஸ்.பி.இளங்கோவன், இணை ஆணையா் அ.இரா.பிரகாஷ் ஆகியோரிடம் வழங்கினா்.
தொடா்ந்து அம்மனுக்கு கொண்டு செல்லப்பட்ட சீா் வரிசை பொருள்களுடன் சிறப்பு கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
பிறகு கொள்ளிடம் வடகாவிரியிலிருந்து புதன்கிழமை அதிகாலை புறப்படும் மாரியம்மன் நொச்சியம், மண்ணச்சநல்லூா் பகுதியில் வழிநெடுக மண்டகப்படி கண்டருளியபடி கோயிலை நோக்கி செல்வாா்.