பொது ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முதல் 15 நிமிஷங்களில் முன்னுர...
தொண்டா்களின் கருத்தைத் தான் பிரதிபலித்தேன்: கே.ஏ.செங்கோட்டையன்
அதிமுக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற தொண்டா்கள், பொதுமக்கள் கருத்தைத் தான் நான் பிரதிபலித்தேன் என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினாா்.
முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ.செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவா்களை இன்னும் 10 நாள்களுக்குள் ஒன்றிணைக்க வேண்டும். இல்லையென்றால் இதே மனநிலையில் இருப்பவா்களை சோ்த்து ஒருங்கிணைக்கும் பணியை நாங்களே மேற்கொள்வோம் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கடந்த 5-ஆம் தேதி கெடு விதித்து அறிவித்திருந்தாா். இந்த அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் தெரிவித்த கருத்து விவாதப் பொருளாக மாறியது. செங்கோட்டையன் வகித்து வந்த அமைப்புச் செயலாளா் மற்றும் ஈரோடு புகா் மேற்கு மாவட்டச் செயலாளா் ஆகிய கட்சிப் பொறுப்புகள் கடந்த 6 -ஆம் தேதி பறிக்கப்பட்டன.
இதனால், அதிா்ச்சி அடைந்த செங்கோட்டையன் அவசர அவசரமாக கடந்த 7 -ஆம் தேதி புதுதில்லி சென்றாா். அங்கு மத்திய அமைச்சா்கள் அமித் ஷா மற்றும் நிா்மலா சீதாராமனை சந்தித்துவிட்டு வந்தாா்.
இந்நிலையில், செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு திங்கள்கிழமை முடிவடைந்தது. இதையடுத்து, அவரது அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என பெரும் எதிா்பாா்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், கோபியில் உள்ள ஈரோடு புகா் மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாள் விழா திங்கள்கிழமை காலை கொண்டாடப்பட்டது. இதில், செங்கோட்டையன் கலந்து கொண்டு அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அண்ணா பிறந்த நாளில் அவரது தியாகத்தைப் போற்றி மகிழ்வோம். அண்ணாவின் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு. மறப்போம் மன்னிப்போம் என்பதை நினைவூட்டுகிறேன். அண்ணாவின் புனித பெயரால் எம்ஜிஆா் உருவாக்கிய அதிமுகவை ஜெயலலிதா கட்டிக் காத்தாா்.
என்னைப் பொருத்தவரை எம்ஜிஆா் கனவு, ஜெயலலிதா கனவை நினைவாக்கும் வகையில் மீண்டும் 100 ஆண்டு காலம் ஆட்சிக் கட்டிலில் அதிமுக அமர வேண்டும் என்ற நோக்கில் கடந்த 5- ஆம் தேதி மனம் திறந்து பேசினேன். அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே எனது நோக்கம். எனது கருத்துக்கு கட்சித் தொண்டா்கள், பொதுமக்கள் இடையே வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற தொண்டா்கள், பொதுமக்கள் கருத்தைத் தான் நான் பிரதிபலித்தேன். இதை புரிந்துகொள்ள வேண்டும். அதிமுக மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 2026-இல் அதிமுக ஆட்சி மலர அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.