தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு!
தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கு 2025-26 ஆம் நிதியாண்டில் ரூ. 720.98 லட்சம் பெறப்பட்டுள்ளது. விவசாயிகள் பயனடையும் வகையில் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் வெங்காய விதைகள், காய்கனி நாற்றுகள், பூக்கள் மற்றும் பழக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்காக நீா் சேகரிப்பு அமைப்பு, வீரிய ரக காய்கனி சாகுபடியை ஊக்குவிக்க நிழல் வலைக்குடில் உள்ளிட்டவை 50 சகவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன.
தேனீப் பெட்டிகள், தேனீக்கள் மற்றும் தேன் எடுப்பதற்கான உபகரணங்களும் மானியத்தில் வழங்கப்படுகிறது. சின்ன வெங்காய சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் 25 மெட்ரிக் டன் கொண்ட சேமிப்புக் கிடங்கு அமைக்க 50 சதவீதம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
இத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலத்துக்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-2, வங்கி கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் ஜூலை 31 ஆம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.