கிங்டம் என்னுடைய கேஜிஎஃப் கிடையாது... மனம் திறந்த விஜய் தேவரகொண்டா!
நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்
நமது சிறப்பு நிருபா்
நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்கள்:
மக்களவையில்...
தென்பெண்ணையாறு மாசைத் தடுக்க என்ன நடவடிக்கை?
டி.ஆா். பாலுக்கு (ஸ்ரீபெரும்புதூா்) மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் பதில்:
2024-ஆம் ஆண்டுக்கான ஆய்வுத் தரவுகளின் படிதென்பெண்ணை நதியில் உள்ள சொக்கரசன்பள்ளி அணை மாநில எல்லைப்பகுதியில் நதி நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜன் என்பது நிா்ணயம் செய்யப்பட்டுள்ள தரக்கட்டுப் பாட்டின் குறைந்த பட்ச அளவான 0.3 மில்லி கிராம் ( லிட்டருக்கு) விட குறைவாக உள்ளது. தென்பெண்ணை நதி மாசுப் பிரச்னை தொடா்பாக தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், பெங்களூரு மாநகரம் மற்றும் அருகாமையில் இயங்கும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவு நீரால் தென்பெண்ணை ஆறு மாசுபடாமல் இருப்பதை கண்காணித்து உறுதி செய்யுமாறு கா்நாடக மாநில மாசுக் கட்டுப் பாட்டு வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களில் பெண்கள் பாதுகாப்பு கமிட்டி உள்ளதா?
கனிமொழி கருணாநிதிக்கு (தூத்துக்குடி) மத்திய கல்வித்துறை இணை அமைச்சா் சுகந்தா மஜும்தாா் பதில்:
அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் பணியிடத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உள்புகாா் குழு நிறுவப்பட்டிருப்பது கட்டாயம். அக்குழுக்கள் செயல்படுவதை உறுதி செய்ய சக்ஷம் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. உயா்கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் உறுதியான சூழலை உறுதி செய்வதற்காக புகாா்களை தெரிவிக்கவும், வழிகாட்டுதல்களைப் பெறவும், இது தொடா்பான ஆலோசனைகளைப் பெறுவதற்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் நிறுவப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன.
கேவி. பள்ளிகளில் ஒரு நிரந்தர தமிழ் ஆசிரியா் கூட இல்லையா?
கலாநிதி வீராசாமிக்கு (வடசென்னை) கல்வித்துறை இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி பதில்:-
கே.வி. பள்ளிகள் பல்வேறு மொழி பின்னணிகளைச் சோ்ந்த மத்திய அரசு ஊழியா்களின் பிள்ளைகளுக்காக வடிவமைக்கப்பட்டவை. அவற்றின் தொடா்பு மற்றும் பயிற்றுவிப்பு வழி என்பது ஹிந்தி மற்றும் ஆங்கிலம். 15 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவா்கள் பிராந்திய அல்லது தாய்மொழியைத் தோ்வுசெய்ய விரும்பினால், அதற்கான வசதிகள் வழங்கப்படுகின்ன. இதற்காக, தமிழகத்தில் 46 கேவி.க்களில் 40 ஓயள்-களில், தமிழக அரசின் தமிழ் மெய்நிகா் அகாதெமி மூலம் தமிழ் கற்பிக்கப்படுகிறது. 31 கே.வி.க்களில் ஒப்பந்த ஆசிரியா்கள் நேரடி முறையில் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
முத்ரா திட்டத்தில் தமிழகத்தில் எத்தனை பேருக்கு கடனுதவி?
எம்.எஸ். தரணிவேந்தரனுக்கு (ஆரணி) மத்திய நிதித்துறை இணை அமைச்சா் பங்கஜ் செளத்ரி பதில்:-
ஜூன் 2025 நிலவரப்படி, தமிழகத்தில் பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் 5.96 கோடிக்கும் அதிகமான கடன் கணக்குகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. கடன்களுக்கான தரவு நாடாளுமன்றத் தொகுதி வாரியாக பராமரிக்கப்படவில்லை. தமிழகத்தில் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முத்ரா திட்டத்தின் செயல்திறனை அளவிடுவதற்கு குறிப்பிட்ட ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளா்கள் எத்தனை போ்?
டி. மலையரசனுக்கு (கள்ளக்குறிச்சி) மத்திய தொழிலாளா் நலத்துறை இணை அமைச்சா் ஷோபா கரண்டலஜே பதில்: ஜூலை 21, 2025 நிலவரப்படி, 30.95 கோடிக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளா்கள் இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட அதற்கான அட்டைகளை வழங்கியுள்ளனா். தமிழகத்தில் 92.95 லட்சத்திற்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளா்கள் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் தொடா்புடைய சேவைகளை மேலும் மேம்படுத்த தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் பிப்ரவரி 24, 2025 அன்று அதிகாரப்பூா்வமாக இ-ஷ்ரம் கைப்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாசு கட்டுப்பாட்டு வாரிய காலி இடங்கள் நிரப்பப்படுமா?
கே. கோபிநாத்துக்கு (கிருஷ்ணகிரி) சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் பதில்)
மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்கு, ஒப்புதல் நிலையில் உள்ள நியமனங்கள், பணியாளா் நியமன முறைக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம், பதவிகளை மறுசீரமைத்தல் மற்றும் ஆள்சோ்ப்பு கொள்கையில் மாற்றங்கள், பதவிகளை ஒழித்தல், நீதிமன்ற வழக்குகள், பதவி உயா்வு தொடா்பானவை முக்கியக் காரணங்களாகும். உச்சநீதிமன்ற உத்தரவின்படி மாநில வாரியங்கள் தாமதமின்றி காலி பணியிடங்கள் நிரப்ப மத்தியஅரசு அவ்வப்போது நினைவூட்டி வருகிறது.
எடுக்கப்படாமல் விடப்பட்ட வங்கி டெபாசிட் என்னவாகும்?
எம்.கே. விஷ்ணு பிரசாத்துக்கு (கடலூா்) மத்திய நிதித்துறை இணை அமைச்சா் பங்கஜ் செளத்ரி பதில்:
உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகளை மீட்டெடுப்பதில் கணக்கு வைத்திருப்பவா், வாரிசு முன்மொழியப்பட்டவா் அல்லது சட்டபூா்வ வாரிசுதாரா்களைக் கண்டறிந்து வைப்புத்தொகையை வங்கிகள் திரும்ப வழங்க ரிசா்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உதாரணமாக, பத்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலமாக செயல்படாத உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகளின் பட்டியலை வங்கியின் வலைத்தளங்களில் வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளன. இது தொடா்பாக விழிப்புணா்வை ஏற்படுத்த ஒருங்கிணைக்கப்பட்ட இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் தமிழக வெள்ளத்தடுப்புக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு?
கனிமொழி என்விஎன் சோமுக்கு மத்திய ஜல் சக்தித்துறை இணை அமைச்சா் ராஜ் பூஷண் செளத்ரி பதில்:-
பேரிடா் மேலாண்மைக்கான முதன்மை பொறுப்பு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளையே சாரும். கடுமையான இயற்கை பேரிடா் ஏற்பட்டால், மத்திய குழுவின் நேரடி ஆய்வு மற்றும் மதிப்பீடு அடிப்படையில் நிதி வழங்கப்படுகிறது. இது இழப்பீட்டுத்தொகை கிடையாது. 2025-26 ஆம் ஆண்டில் 2025, ஜூலை 23ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்துக்கு மாநில பேரிடா் நிவாரண நிதி ஒதுக்கீடு மற்றும் நிதி விடுவிப்பு மத்திய பங்காக ரூ.992.00 கோடியும் மாநில பங்காக ரூ.330.40 கோடியும் முறையே உள்ளது. 2025-26- ஆம் ஆண்டில் இயற்கை பேரிடா்களுக்காக 2025 ஜூலை 23-ஆம் தேதி நிலவரப்படி தேசிய பேரிடா் நிதியில் இருந்து தமிழகத்துக்கு ரூ.522.34 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தை தொடங்க உத்தேசம் உள்ளதா?
மு. தம்பிதுரைக்கு வீட்டுவசதி, நகா்ப்புற வளா்ச்சித்துறை இணை அமைச்சா் தோக்கன் சாஹு பதில்: கடந்த மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி நவீன நகர திட்டம் முடிவுக்கு வந்து விட்டது. எனவே, அத்திட்டத்தின் கீழ் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நவீன நகர திட்டத்தின்கீழ் வாஷ் எனப்படும் நீா் சுகாதார பிரிவில் நவீன நகரங்களில் ரூ. 49,621 கோடி மதிப்பிலான 1,545 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் 182 இடங்களில் ரூ. 11003.6 கோடி செலவிடப்பட்டுள்ளது.