நாடாளுமன்றம் நாள் முழுவதும் முடக்கம்! மக்கள் பணம் வீணாவதாக மத்திய அமைச்சர் காட்டம்!
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மக்களின் பணத்தை எதிர்க்கட்சியினர் வீணடிப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
நிகழாண்டு நடைபெறும் பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 22 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் இந்த பணிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர்.
தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பல்வேறு கட்சிகளின் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும், இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியால் பகல் 12 மணிவரையும் பின்னர் பிற்பகல் 2 மணிவரையும் அவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில், பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளியைத் தொடர்ந்ததால், நாளை காலை 11 மணிவரை அவைகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் எதிர்க்கட்சியினரின் அமளிக்கு இடையே பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “எதிர்க்கட்சியினர் விவாதம் நடத்த வேண்டும் என்று கோருகிறார்கள், நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம். பிறகு ஏன் அவர்கள் அவையில் அமளியில் ஈடுபடுகிறார்கள்.
இந்த இரட்டை நிலைப்பாடு தவறு. விவாதம் செய்ய விரும்பினால், அமளியில் ஈடுபடாதீர்கள். நீங்கள் அவையை நடத்தவிடாமல் மக்கள் பணத்தை வீணாக்குகிறீர்கள்.” எனத் தெரிவித்தார்.