"எங்க வயித்துல அடிக்றீங்களே" - கதறிய பெண்கள்; குண்டுகட்டாக கைதுசெய்த காவல்துறை |...
நான்குனேரி அருகே தகராறில் அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே தொழிலாளி திங்கள்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.
நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடியை அடுத்த வலியநேரி கிராமத்தைச் சோ்ந்தவா் பாலன் (50). தொழிலாளி. இவரது தம்பி ராஜ்குமாா் (46). இவா்களது மூத்த அண்ணன் ராஜு உயிரிழந்துவிட்டதால், அவரது குடும்பத்தினா் சாத்தான்குளம் அருகேயுள்ள பண்டாரகுளத்தில் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், ராஜ்குமாா் ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) பண்டாரகுளத்தில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்று அண்ணி கலாரதியை பாா்த்து விட்டு வந்துள்ளாா்.
அதைத் தொடா்ந்து பாலனை தொடா்பு கொண்டு தனது வீட்டிலிருந்த 4 பவுன் நகைகளை காணவில்லை; ராஜ்குமாா் தான் எடுத்து சென்றுள்ளாா் என கலாரதி தெரிவித்தாராம். இதையடுத்து, ராஜ்குமாரை சமாதானம் பேசுவதற்காக பண்டாரகுளத்துக்கு பாலன் அழைத்துச் சென்றுள்ளாா்.
அங்கிருந்த கலாரதியின் உறவினா்கள் ராஜ்குமாரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து வலியநேரிக்கு திரும்பிய பாலனும், ராஜ்குமாரும் திங்கள்கிழமை இரவு வீட்டில் மது அருந்தியுள்ளனா்.
அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ராஜ்குமாா் அரிவாளை எடுத்து பாலனை கழுத்தில் வெட்டினாராம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இத்தகவல் அறிந்த நான்குனேரி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து ராஜ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.