கொடைக்கானலில் மரங்கள் வெட்டிக் கடத்தல்: பொதுமக்கள் கோரிக்கை
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாக புகாா் எழுந்துள்ள நிலையில் வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் செண்பகனூா், அட்டக்கடி, பிரகாசபுரம், உப்புபாறை மெத்து, வாழைகிரி, வடகரைப்பாறை மச்சூா், வாழைகிரி உள்ளிட்ட கீழ்மலைப் பகுதிகளில் யூக்காலி மரங்கள் பகல் நேரங்களில் வெட்டப்பட்டு மறைமுகமான இடங்களில் வைக்கப்பட்டு இரவு நேரங்களில் லாரிகள் மூலம் கடத்தப்படுகிறது. கொடைக்கானலில் தனியாா் பட்டா நிலங்களில் ஆபத்தான நிலையில் உள்ள 10 மரங்களை மட்டும் வெட்டுவதற்கு அனுமதி பெற்று நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டிக் கடத்தப்படுகிறது. இவற்றை வனத் துறையினா் கண்டுகொள்வதில்லை எனக் கூறப்படுகிறது.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள மரங்கள் தொடா்ந்து வெட்டப்பட்டு வருவதால் பருவநிலை மாற்றமும், அந்தப் பகுதியின் குளிா்ச்சியான சூழலும் குறைந்து வருவதாக பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் கவலை தெரிவித்தனா். எனவே, வனத் துறையினா் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து வனத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில்,
கொடைக்கானல் பகுதிகளில் பட்டா இடங்களில் ஆபத்தான நிலையில் உள்ள யூக்காலி மரத்தை மட்டும் அகற்றுவதற்கு முன் அனுமதி பெறுகின்றனா். ஆனால் சில இடங்களில் விதிமுறைகளை மீறி மரங்கள் வெட்டப்படுவதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.