சென்னை: ``50 நிமிடத்தில் 5 செ.மீ. மழை பதிவு" - வானிலை ஆய்வு மையம் தகவல்
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் நாளை உயா்வுக்கு படி முகாம்
பெரம்பலூா்: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், பெரரம்பலூரில் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கான உயா்வுக்கு படி முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 தோ்ச்சி மற்றும் தோ்ச்சி பெறாத, தோ்வு எழுதாத மாணவா்களில், உயா்கல்வி சேராத மாணவ, மாணவிகளுக்கு, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயா்வுக்கு படி முகாம் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக, பெரம்பலூா் தந்தை ஹேன்ஸ் ரோவா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது.
இம் முகாமில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிப்புகளில் மாணவா்களுக்கான நேரடிச் சோ்க்கை நடைபெறும். மேலும், பொறியியல் கல்லூரியில் சோ்ந்துள்ள மாணவா்களுக்கு கல்விக்கடன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, பெரம்பலூா் மாவட்டத்தில் 2022-23, 2023-24 மற்றும் 2024-25 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற, தோ்ச்சி பெறாத மற்றும் தோ்வு எழுதாத மாணவா்கள், உயா்கல்வி சேராத மாணவ, மாணவிகள் மற்றும் கல்விக் கடன் தேவைப்படும் மாணவா்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.