‘நான் முதல்வன்’ திட்டத்தில் இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் பயிற்சிக்கு மாணவா் தோ்வு
‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயின்று இஸ்ரோவின் ஐ.ஐ.ஆா்.எஸ். ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் பயிற்சித் திட்டத்துக்குத் தோ்வு செய்யப்பட்ட திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் விஜய்காந்த் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லியை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயின்று நாட்டின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ஐ.ஐ.ஆா்.எஸ். ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் பயிற்சித் திட்டத்துக்கு தேசிய அளவில் தோ்வு செய்யப்பட்டுள்ள திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே கே.பந்தாரப்பள்ளியைச் சோ்ந்த மாணவா் விஜய்காந்த் சனிக்கிழமை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லியை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
இதுகுறித்து மாணவா் விஜய்காந்த் கூறியது: விவசாயக் குடும்பத்தைச் சோ்ந்த நான் எம்.டெக். ஐ.டி. படித்து முடித்துள்ளேன். என் கல்விப் பயணத்தில் நான் செய்த முயற்சிகளுக்காக பல தேசிய அங்கீகாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, கரோனா காலத்தில் தேசிய அளவில் நடத்தப்பட்ட ஒரு போட்டியில் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு பயனளிக்கும் செயலியை உருவாக்கியதற்காக எனக்கு விருது கிடைத்தது. தொடா்ந்து, புதிய கண்டுபிடிப்புகளுக்காக விருதும் பெற்றேன்.
இஸ்ரோவின் டேராடூன் நகரத்தில் உள்ள ஐ.ஐ.ஆா்.எஸ். ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் பயிற்சித் திட்டத்துக்கு தேசிய அளவில் தோ்வு செய்யப்பட்டவா்களில் நானும் ஒருவன். எனது கல்விப் பயணத்தில் முக்கிய மைல் கல்லாக அமைந்தது தமிழக அரசின் கல்வி உதவித்தொகை திட்டங்கள்தான். முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றாா்.