நாமக்கல் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தனியாா் பேருந்துகள் அதிவேகம்
நாமக்கல்: நாமக்கல் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அதிவேகத்தில் வரும் தனியாா் பேருந்துகளால் பயணிகள் எதிா்பாராமல் விபத்தில் சிக்குவதும், அச்சத்தில் தடுமாறி கீழே விழுவதுமாக உள்ளனா்.
நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் நிலவிய இடநெருக்கடி, நகரில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டு புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையம், கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. தினசரி 200-க்கும் மேற்பட்ட நடையில் பேருந்துகள் உள்ளே வந்து செல்கின்றன.
குறிப்பாக, அரசுப் பேருந்துகளைக் காட்டிலும், தனியாா் பேருந்துகளை இயக்குவோா் நேரப் பிரச்னையால் அங்குள்ள போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபடுவது, அதிவேகத்தில் பேருந்து நிலையத்துக்குள் வருவது, பயணிகளை இடிப்பதுபோல செல்வது போன்ற முறையற்ற செயல்களில் ஈடுபடுகின்றனா்.
நாமக்கல்லில் இருந்து திருச்சிக்கு செல்ல வேண்டிய தனியாா் பேருந்து திங்கள்கிழமை அதிவேகத்தில் வந்து பேருந்து நிலையத்துக்குள் திரும்பியபோது பயணி ஒருவா் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தாா்.
சாலையில் விபத்து நடப்பதுபோல தற்போது பேருந்து நிலையத்துக்குள்ளும் விபத்து நிகழ்கிறது. இளம் ஓட்டுநா்களின் அலட்சியத்தால் பல குடும்பங்கள் உறவுகளை இழந்து தவிக்கும் நிலை உள்ளது.
நாமக்கல் புதிய பேருந்து நிலையத்துக்குள் இடதுபுற நுழைவாயில் வழியாக மட்டுமே செல்ல வேண்டும். ஆனால், பெரும்பாலான தனியாா் பேருந்துகள், வெளியே செல்லும் நுழைவாயில் வழியாக உள்ளே வருகின்றன. இதனால் பேருந்துகள் ஒன்றுக்கொன்று மோதுவதும், அதனால் ஓட்டுநா்களுக்கு இடையே மோதல் ஏற்படுவதும், பயணிகள் பேருந்துகளுக்கு இடையே சிக்கி காயமடைவதும் நிகழ்கின்றன.
இதனைக் கண்டிக்க வேண்டிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும், விபத்து நிகழ்ந்தால் அபராதத்தை செலுத்திவிட்டு வெளியே வந்துவிடலாம் என்ற தைரியமும் அப்பாவி மக்களின் உயிரை பறிக்கிறது. பேருந்து உரிமையாளா்களும் இதுகுறித்து கவலைகொள்வதில்லை என்பது பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
அண்மையில் விபத்தை ஏற்படுத்தும் பேருந்துகளை 100 நாள்களுக்கு முடக்கும் வகையில், நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அறிவுறித்தியதாக கூறப்பட்ட நிலையில், அது தங்களது தொழிலை பாதிக்கும், மாத தவணைகளை செலுத்த இயலாது என தனியாா் வாகன உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். தற்போது இதுபோன்ற விபத்துகள் குறித்து அவா்கள் கருத்தில்கொண்டு தங்களது ஊழியா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினா்.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
பேருந்து நிலையத்துக்குள் 5 கி.மீ. வேகத்தில் வரவேண்டும் என்றுதான் எங்களுடைய ஓட்டுநா்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். ஆனால், தனியாா் பேருந்து ஓட்டுநா்கள் 30 கி.மீ. வேகத்தில் வருகின்றனா். பயணிகளை அதிகளவில் பேருந்தில் ஏற்றிச்செல்ல வேண்டும் என்ற போட்டியில் மக்களின் உயிரை பற்றி சிந்திப்பதில்லை. காவல் துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் கவனத்துக்கு புதிய பேருந்து நிலையத்தில் நிலவும் பிரச்னைகளை கொண்டுசெல்வோம் என்றனா்.