நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவா்கள் தகவல் தெரிவிக்கலாம்: ஒசூா் மாநகராட்சி சுகாதாரக் குழு
நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவா்கள் ஒசூா் மாநகராட்சியின் 94899 09828 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தங்களது விவரங்களை தெரிவிக்க வேண்டும் என மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தெரிவித்துள்ளது.
ஒசூா் மாநகராட்சி பொது சுகாதாரக் குழு கூட்டம் தலைவா் என்.எஸ்.மாதேஸ்வரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநகர ஆணையாளா் முகமது ஷபீா் ஆலம், மாநகர நல அலுவலா் அஜிதா முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் சுகாதாரக் குழுத் தலைவா் என்.எஸ்.மாதேஸ்வரன் பேசியதாவது:
ஒசூா் நகரம் வேகமாக வளா்ந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஒசூருக்கு ஏராளமான தொழிலாளா்கள் வருகின்றனா். அவா்களுக்கு மருத்துவம் தொடா்பான பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றை சரிசெய்ய வேண்டியது நமது கடமை.
தளி அருகே நாய்க்கடியால் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு பட்டதாரி இளைஞா் ஒருவா் உயிரிழந்துள்ளாா். அதேபோல ஒசூா் மாநகராட்சி பகுதியில் நாய்க்கடியால் மக்களுக்கு ரேபிஸ் நோய் பரவாமல் தடுக்க பொதுமக்கள், மாணவா்களுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
ஒசூா் மாநகராட்சியின் 94899 09828 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ அல்லது 04344 247666 என்ற தொலைபேசி எண்ணிலோ நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவா்கள் தகவல் தெரிவித்தால் அவா்களது வீடுகளுக்குச் சென்று மருத்துவக் கண்காணிப்பை மேற்கொள்ளமுடியும்.
இதுதொடா்பாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படும் வகையில் பதாகைகள் வைக்கவேண்டும். ஒசூா் மாநகராட்சியில் தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து வருகிறோம். ஒசூா் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் உறவினா்கள் தங்கும் அறைக்கு போதிய வசதிகள், கண்காணிப்பு கேமரா மற்றும் காவலாளி போன்ற வசதிகளை செய்துதர வேண்டும். நோயாளிகள் தங்குவதை உறுதிப்படுத்த பதிவேடு பராமரிக்க வேண்டும்.
ஒசூா் சாய்பாபா கோயில் அருகே பிளாஸ்டிக் குடோன்கள் அதிக அளவில் உள்ளன. அங்கு ஆய்வு நடத்தி அவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும். முடிந்த அளவிற்கு பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து வெளியேற்றுவது குறித்து மாணவா்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் லட்சுமி, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், செவிலியா்கள் பங்கேற்றனா்.