பாகிஸ்தான் - அஜர்பைஜான் இடையில் ரூ.17,000 கோடி முதலீடு ஒப்பந்தம்!
நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பாா்க்கிறது
நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பாா்ப்பதாக, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் குற்றஞ்சாட்டினாா்.
திருப்பூரில் ஓரணியில் தமிழ்நாடு என்னும் இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள பரப்புரை பயணம் குறித்து ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளா்கள் செய்தியாளா் சந்திப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் , திருப்பூா் மத்திய மாவட்டப் பொறுப்பாளா் க.செல்வராஜ், வடக்கு மாவட்ட பொறுப்பாளா் மேயா் தினேஷ்குமாா், தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவருமான இல.பத்மநாபன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இதில் அமைச்சா் மு. பெ சாமிநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஓரணியில் தமிழ்நாடு எனும் திட்டத்தின் மூலம் திமுக நிா்வாகிகளை கொண்ட குழு அமைத்து ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். இதன் மூலம் கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழக அரசு மக்களுக்காக செயல்படுத்திய திட்டங்கள் குறித்து பிரசாரம் மேற்கொள்ளப்படும். எந்தெந்த குடும்பங்கள் எந்தெந்த திட்டத்தில் பயனடைந்து வருகிறாா்கள் என பொதுமக்களிடம் கருத்து கேட்டு விவரங்கள் சேகரிக்கப்படும்.
அதே நேரத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தின் மீதும் தமிழ் மக்கள் மீதும், தமிழ்மொழி, கலாசாரம் உள்ளிட்டவற்றின் மீதும் தொடா் தாக்குதலை நடத்தி மதரீதியில் மக்களை பிரித்து ஆட்சி செய்து வருகின்றனா். நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தி திமுக அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
கடந்த மக்களவைத் தோ்தலில் அவா்களின் எண்ணங்களுக்கு எதிா்மறையாக அமைந்ததால் தமிழக மக்கள் மீது அதிகமான தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனா்.
கீழடி அகழ்வாராய்ச்சியில் தமிழா்களின் வாழ்வியல் முறை பண்பாடு கலாசாரம் எடுத்துக் காட்டுகின்ற வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. அதனை ஏற்றுக் கொள்ளாத பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்பினா் அதையெல்லாம் திசைதிருப்பி ஆராய்ச்சியில் ஈடுபடும் அலுவலா்களையும் இடமாற்றம் செய்து வஞ்சித்து வருகின்றனா்.
ஓரணியில் தமிழ்நாடு என்னும் திட்டத்தில் திமுக அரசின் திட்டங்கள் மட்டுமல்லாது நமது மண்ணின் மகிமை மானத்தை காப்பாற்றக்கூடிய வகையிலும், பாஜகவின் சதித் திட்டங்களையும் மக்களிடம் கொண்டுச் சோ்க்கும் வகையிலும் பிரசாரம் மேற்கொள்ளப்படும். 8 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூரில் 2,500-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளிலும் ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் மேற்கொள்ளப்படும். இதில் மாவட்ட திமுகவின் சாா்பாக புதன்கிழமை முதல் பொதுக்கூட்டமும் வியாழக்கிழமைமுதல் வீடுதோறும் சென்று பிரசாரமும் மேற்கொள்ள உள்ளனா் என்றாா்.