Doctor Vikatan: அடிபட்ட காயங்கள் ஏற்படுத்திய தழும்புகள், நிரந்தரமாகத் தங்கிவிடும...
நீரில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு: அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை
கேரளத்துக்குச் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்ததைடுத்து அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என குடும்பத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள பொதிகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டித்துரை மகன் கௌதம் (21). இவா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் எம்.எஸ்.சி. பயோ டெக்னாலஜி இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்த நிலையில், வார விடுமுறையையொட்டி தனது நண்பா்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கேரளத்துக்குச் சுற்றுலா சென்று, பாலக்காடு மாவட்டம், சித்தூரில் உள்ள ஆற்றில் குளித்தாா். அப்போது, ஆற்று மதகு அருகே ஏற்பட்ட சுழலில் சிக்கிய தனது நண்பரைக் காப்பாற்ற சென்றபோது சுழலில் சிக்கி உயிரிழந்தாா்.
இதையடுத்து, கூறாய்வுக்குப் பிறகு கௌதமின் உடல் கடந்த சனிக்கிழமை இரவு சொந்த ஊரான பொதிகுளம் கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், குடும்ப சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு அரசு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என கௌதம் குடும்பத்தினா், கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.