உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் இந்தியாவின் வரிக் கொள்கை: மத்திய அரசு
நேற்று வந்தவன்! முதல்வர், பிரதமர் பெயர்களைச் சொன்ன தவெக தலைவர் விஜய்!
சென்னை: மிக வித்தியாசமான சட்டப்பேரவைத் தேர்தலை தமிழ்நாடு சந்திக்கும். இந்த தேர்தலில் போட்டியே திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் என்று தமிழக வெற்றிக் கழக பொதுக் குழுவில் கட்சித் தலைவர் விஜய் கூறினார்.
திருவான்மியூரில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழுவில் தலைவர் விஜய் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், நேற்று வந்தவன் எல்லாம் முதல்வர் ஆக கனவு காண்கிறான் என்கிறீர்களே? அப்படியெனில் ஏன் எந்தக் கட்சிக்கும் இல்லாத நெருக்கடியை எனக்கும் என் கட்சிக்கும் கொடுக்கிறீர்கள்?
அணை போட்டு ஆற்றைத் தடுக்கலாம், காற்றை தடுக்க முடியாது, தடுக்க நினைத்தால் சாதாரண காற்று சூறாவளியாக மாறும். சக்தி மிக்க புயலாக மாறும் என்று கூறினார்.
மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது அவர்களே, செயலிலும் ஆட்சியிலும் அதனைக் காட்ட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பெயரையும், தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடியின் பெயரையும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். இதுவரை பெயரைக் குறிப்பிடாமல் அரசுகளை தாக்கிப் பேசி வந்த விஜய் முதல் முறையாகப் பேரைக் குறிப்பிட்டதோடு, பெயரைச் சொல்ல என்ன பயமா என்றும் கேட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய விஜய், மக்கள் சக்தியின் உதவியோடு மக்கள் ஆட்சி அமைப்பதில் உறுதியாக இருக்கிறோம். காற்றையும் மழையையும் யாரால் கட்டுப்படுத்த முடியும். அதுபோலத்தான், தமிழகத்தில் அமையவிருக்கும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியையும். யாராலும் கட்டுப்படுத்த முடியாது.
தமிழகத்தில் தவெக அமைக்கவிருக்கும் ஆட்சி, அதிகாரப்பகிர்வுடன் கூடிய ஆட்சியாக இருக்கும். ஆட்சி அமைத்ததும் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்வோம். சட்டம்- ஒழுங்கு முறையாக கண்டிப்புடன் இருக்கும். கல்வி, சுகாதாரம், மருத்துவம் என அனைத்திலும் கவனம் செலுத்துவோம், அனைத்தும் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதே நமது இலக்கு.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் என அனைத்து தொழிலாளர்கள் பக்கமும் நாம் கண்டிப்பாக நிற்போம். ஏனெனில் நாம் எப்போதும் உழைப்பவர்கள் பக்கம்தான்.
தமிழகம் என்பது விவசாய பூமி, விவசாயத்துக்கு எதிராக எந்த திட்டத்தையும் கொண்டு வர வேண்டாம். அதை நாங்கள் எதிர்ப்போம். தமிழகத்தை நாங்கள் எல்லா வகையிலும் பாதுகாப்போம். அது எங்கள் கடமை என்று விஜய் கூறியுள்ளார்.