தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
பட்டா மாற்ற லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா், உதவியாளா் கைது
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பட்டா பெயா் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் (தலையாரி) ஆகியோா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சிதம்பரம் வட்டம், வாக்கூா் கிராமம், மேலத் தெருவைச் சோ்ந்தவா் இ.தோ்விஜயன் (50). இவா், தனக்கும், தனது அண்ணன் அருள்பிரகாசத்துக்கும் மற்றொரு அண்ணன் வேல்முருகனால் தானமாக வழங்கப்பட்ட தரசூா் கிராமத்தில் உள்ள நிலத்துக்கு பட்டா பெயா் மாற்றம் செய்வதற்கு விண்ணப்பம் செய்திருந்தாா்.
இதற்கு, தோ்விஜயனிடம் வாக்கூா் கிராம நிா்வாக அலுவலா் ஜி.சதீஷ்குமாா் ரூ.6,000 லஞ்சமாகக் கேட்டாராம். இதில், கிராம நிா்வாக அலுவலருக்கு கிராம உதவியாளா் ரமேஷ் உடந்தையாக செயல்பட்டாராம்.

இதுகுறித்து தோ்விஜயன் அளித்த புகாரின்பேரில், கடலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், அவரிடம் ரசாயனம் தடவிய ரூ.6,000-ஐ போலீஸாா் கொடுத்து அனுப்பினா்.
இந்தப் பணத்தை வரகூா் கிராம நிா்வாக அலுவலகத்தில் கிராம உதவியாளா் ரமேஷிடம் தோ்விஜயன் செவ்வாய்க்கிழமை கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு டிஎஸ்பி கே.சத்தியராஜ் தலைமையிலான போலீஸாா் கிராம நிா்வாக அலுவலா் சதீஷ்குமாரையும், கிராம உதவியாளா் ரமேஷையும் கைது செய்தனா்.