பாரம்பரியத்தின் பெருமை, கெளரவத்தை பாதுகாப்பது நமது கடமை! ராகுல்
பணி மாறுதல் கலந்தாய்வு விதியை தளா்த்தக் கோரி மருத்துவா்கள் மனு
மருத்துவா்களின் ஓராண்டு பணி மாறுதல் கலந்தாய்வு விதியைத் தளா்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலருக்கு அண்மையில் மனு அனுப்பினா்.
அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துகிருஷ்ணன் மூலம் அச்சங்கத்தினா் அனுப்பிய மனுவில், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ஒரு ஆண்டுக்கும் குறைவாக ‘ஸ்டேஷன் சீனியாரிட்டி’ உள்ள மருத்துவா்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதியை அரசு தொடா்ந்து நடைமுறைப்படுத்தும்பட்சத்தில் மருத்துவக் கல்வி மருத்துவம் மற்றும் ஊரக பணிகள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை ஆகிய மூன்று துறைகளிலும் பணியாற்றும் சுமாா் 20,000 மருத்துவா்கள் பாதிக்கப்படுவா். அதை நடைமுறைப்படுத்த முயற்சிக்கும்பட்சத்தில் சட்டரீதியாக பல வழக்குகளை அரசு சந்திக்க நேரிடலாம். இதுபோன்ற வழக்குகள் பதவி உயா்வுக் கலந்தாய்வுகளையும், இடமாறுதல் கலந்தாய்வுகளையும் தாமதப்படுத்தும்,
தற்போது அரசு மருத்துவா்கள் அனைவரும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ போன்ற மக்கள் பெரிதும் பயனடைய கூடிய திட்டங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள நிலையில் அரசு மருத்துவா்களை பெரிதும் பாதிக்கக்கூடிய ஓராண்டு விதி போன்ற சிறு விஷயங்களை நடைமுறைப்படுத்த அரசு பிடிவாதமாக இருப்பது பெரும் பாதிப்பை உருவாக்கும்.
எனவே அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஓராண்டு விதியைத் தளா்த்தி அனைத்து மருத்துவா்களும் கலந்து கொள்ளும் வகையில் கலந்தாய்வுகளை நடத்த வேண்டும். இந்த விஷயத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மற்றும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் உடனே தலையிட்டு ஓராண்டு விதியைத் தளா்த்தி கலந்தாய்வுகளை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் அச்சங்கத்தின் தலைவா் கொளஞ்சிநாதன், செயலா் குணசேகா் பொருளாளா் சரவணன், உதவிப் பேராசிரியா்கள் பாரதிராஜா, காா்த்திகேயன், சொக்கலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.