உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் இந்தியாவின் வரிக் கொள்கை: மத்திய அரசு
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு இன்று தொடக்கம்: 39 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனா்
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) தொடங்கும் நிலையில், கோவை மாவட்டத்தில் 39,434 மாணவ-மாணவிகள் இந்தத் தோ்வை எழுதுகின்றனா்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 518 அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 19,509 மாணவா்களும், 19,925 மாணவிகளும் என மொத்தம் 39,434 போ் இந்தத் தோ்வை எழுதுகின்றனா்.
இவா்களுக்காக 158 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 11 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 22 விடைத்தாள் கட்டுக்காப்பாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வுப் பணியில் 158 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 158 துறை அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.
46 வழித்தட அலுவலா்கள், 220 பேரைக் கொண்ட நிலையான, பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வுப் பணியில் மொத்தம் 2,370 அறைக் கண்காணிப்பாளா்கள், 320 அலுவலகப் பணியாளா்கள், மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு உதவக் கூடிய, சொல்வதை எழுதக் கூடிய பணியில் 945 பேரும் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
முதல் நாளான வெள்ளிக்கிழமை தமிழ், மொழிப்பாடத் தோ்வு நடைபெறுகிறது. தோ்வு மையங்களுக்கு மின்சாரம், குடிநீா் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும்படியும், காவல் துறை பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.