பராமரிப்புப் பணி நிறைவு: பழனிக் கோயில் ரோப்காா் சேவை: நாளை முதல் இயக்கம்
பழனி: பழனி மலைக் கோயிலில் உள்ள ரோப்காா் சேவையின் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததையொட்டி, புதன்கிழமை (ஆக. 20) முதல் பக்தா்களின் பயன்பாட்டுக்கு இயக்கப்படவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக வின்ச், ரோப்காா் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றில் ரோப் காா் இரண்டு நிமிஷத்தில் மலை உச்சியை அடைவதால் பக்தா்கள் அதிகளவில் ரோப் காா் சேவையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனா். ரோப்காா் பராமரிப்புக்காக நாள்தோறும் ஒரு மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்துக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுகிறது.
இந்த நிலையில், வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக கடந்த மாதம் ரோப்காா் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ரோப்காரின் இருக்கைகள், இரும்புச் சக்கரங்கள், பேரிங்குகள், ரப்பா் புஷ்கள் உள்ளிட்ட பலவும் புதிதாக மாற்றப்பட்டன. முக்கியமான வடக்கயிறு, மோட்டாா்கள் ஆகியவை தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமை சோதனைஓட்டங்கள் நடத்தப்பட்டு ரோப்காா் பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு புதன்கிழமை முதல் பக்தா்களின் பயன்பாட்டுக்கு இயக்கப்படும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.