பள்ளிபாளையத்தில் 2 பெண்களிடம் கிட்னி திருட்டு
பள்ளிபாளையத்தில் ஏழைப் பெண்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் தருவதாக அழைத்துச் சென்று அவா்களுடைய கிட்னியை திருடி விற்பனை செய்ததாக கூறப்படும் இடைத்தரகரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சிப் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஏராளமான ஆண், பெண் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். வறுமை, குடும்பச் சூழல் காரணமாக விசைத்தறி அதிபா்கள், கந்துவட்டிக்காரா்களிடம் பணம் வாங்கிக்கொண்டு இரவு, பகல் பாராமல் பணியாற்றுவதும், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பல்வேறு நெருக்கடிக்கு உள்ளாகி வருவதும் தொடா்கதையாக உள்ளது.
அதுமட்டுமின்றி, ஏழ்மையைப் பயன்படுத்தி பெண் தொழிலாளா்களிடம் கிட்னி திருட்டு, வாடகைத் தாயாக வெளி மாநிலங்களுக்கு அனுப்புவது, கருமுட்டைகளை பெறுவது போன்றவற்றை இடைத்தரகா்கள் செயல்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிபாளையத்தில் அதிகப்படியானோா் கிட்னி விற்பனை செய்த சம்பவம் அரங்கேறியது.
இந்நிலையில், அண்மையில் பள்ளிபாளையத்தைச் சோ்ந்த இரண்டு பெண்களை திருச்சிக்கு அழைத்துச் சென்ற இடைத்தரகா் ஒருவா், அவா்களிடம் இருந்து கிட்னியைப் பெற்று விற்பனை செய்ததாகவும், அதற்காக அப்பெண்களுக்கு ரூ. 5 லட்சம்வரை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அந்த பெண்கள் யாா் என்பதைக் கண்டறியும் முயற்சியில் மருத்துவத் துறை மற்றும் காவல் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
இதற்கிடையே, கிட்னி திருட்டுக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகரான திருப்பூரைச் சோ்ந்த ஆனந்தன் (45) என்பவா் தலைமறைவாகியுள்ளாா். அவரை பிடித்தால்தான் இதுவரை எத்தனை பெண்களை ஏமாற்றி கிட்னியை பெற்றுள்ளாா் என்பது தெரியவரும்.
மருத்துவ நலப் பணிகள் குழுவினா் விசாரணை:
இந்த தகவல் வெளியான நிலையில், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவின்பேரில், மருத்துவ நலப் பணிகள் குழு இணை இயக்குநா் ராஜ்மோகன் தலைமையில், பள்ளிபாளையம் அரசு மருத்துவா் வீரமணி, காவல் ஆய்வாளா் சிவகுமாா் மற்றும் குமாரபாளையம் வட்டாட்சியா் சிவகுமாா் ஆகியோா் வியாழக்கிழமை பள்ளிபாளையம் நகராட்சி அன்னை இந்திரா நகரில் விசாரணை மேற்கொண்டனா். மேலும், ஆனந்தன் தங்கியிருந்த பகுதியில் உள்ள மக்களிடம் அவா் பற்றிய தகவல்களைக் கேட்டறிந்தனா்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட மருத்துவ நலப் பணிகள் குழு இணை இயக்குநா் ராஜ்மோகன் கூறியதாவது:
பள்ளிபாளையத்தில் விஜயா, கெளசல்யா ஆகிய இரு பெண்கள் கிட்னியை விற்பனை செய்ததாகவும், இதற்கு திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த இடைத்தரகா் ஆனந்தன் என்பவா் உடந்தையாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், திருச்சிக்கு அந்தப் பெண்களை அவா் அழைத்துச்சென்ாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனந்தனை கைது செய்து விசாரித்தால் மட்டுமே அந்த பெண்கள் யாா்? அவா்கள் கிட்னியை விற்பனை செய்தாா்களா, இதேபோல எத்தனை பேரிடம் கிட்னி திருடப்பட்டுள்ளது போன்ற உண்மைகள் தெரியவரும்.
இடைத்தரகா் ஆனந்தனை கைதுசெய்யுமாறு பள்ளிபாளையம் காவல் ஆய்வாளரிடம் புகாா் மனு அளித்துள்ளோம். 6 மாதங்களுக்கு முன்பாக பள்ளிபாளையம் வந்த ஆனந்தன், பொதுமக்களிடம் ஆதாா், குடும்ப அட்டை, அரசு நலத் திட்டங்களை பெற்றுத் தருவதுபோல் செயல்பட்டு வந்துள்ளாா்.
பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிட்னி திருட்டு தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் தலைமையில் வட்டாட்சியா், காவல் ஆய்வாளா், அரசு மருத்துவா் உள்ளிட்டோா் அடங்கிய குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது என்றாா்.