ஈரோடு: 'குட்டி கண்ணன்கள், குட்டி ராதாக்கள்' - மாநகராட்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்...
பழனியில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு
பழனியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மலைக்கோயில், அடிவாரம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பழனி மலைக்கோயிலின் படிவழிப் பாதை, ரோப்காா் மற்றும் வின்ச் நிலையங்களில் பக்தா்கள் மெட்டல் டிடெக்டா் நுழைவாயில் வழியாக உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனா். மேலும், மலைக் கோயிலுக்கு வரும் சந்தேகத்துக்கிடமான பக்தா்களின் உடைமைகளை கோயில் பணியாளா்கள், போலீஸாா் பரிசோதித்த பின்னரே மேலே செல்ல அனுமதிக்கின்றனா்.
படிப்பாதையில் நவீன ஸ்கேனா் கொண்டு போலீஸாா் பக்தா்களின் கைப்பைகளை சோதனை செய்த
பிறகே படியேற அனுமதிக்கின்றனா். மலைக்கோயிலில் ராஜகோபுரம், தங்கவிமானம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதமேந்திய போலீஸாரும், கோயில் பாதுகாவலா்களும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனா்.
பழனிக் கோயில் தவிர பேருந்து நிலையம், ரயில் நிலையம், அடிவாரம் கிரிவீதி உள்ளிட்ட பல பகுதிகளிலும் கூடுதல் போலீஸாா் சாதாரண உடைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
மலைக்கோயிலில் முதல் ரயில்நிலையம், பேருந்து நிலையம் வரை வழிநெடுக கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு அனைவரது நடமாட்டமும் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டது.