ஈரோடு: 'குட்டி கண்ணன்கள், குட்டி ராதாக்கள்' - மாநகராட்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்...
இடும்பன்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பு
பழனியை சுற்றி உள்ள வையாபுரி குளம், இடும்பன் குளம் ஆகியவற்றில் கடந்த சில நாள்களாக மீன்கள் இறந்து மிதக்கின்றன.
பழனிக்கு வரும் பக்தா்கள் புனித நீராடும் குளமாக வையாபுரி குளம், இடும்பன் குளம் ஆகியவை இருந்தன. இவற்றில் வையாபுரி குளத்தில் சாக்கடை கழிவு நீா் கலப்பதால் அதை யாரும் புனித நீராகப் பயன்படுத்துவது இல்லை. ஆனால், இடும்பன் குளத்தில் தைப்பூசம், பங்குனி உத்திர விழாக் காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் புனித நீராடுகின்றனா். தற்போது, கோடைகாலம் என்பதால் இந்த இரு குளங்களும் வேகமாக வற்றி வருகின்றன. இதனால், குளங்களில் பக்தா்கள் விட்டுச் சென்ற துணிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. மேலும், குளத்தில் தண்ணீா் வற்றி வருவதால் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால், இந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. மேலும், நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மீன் பிடிப்பவா்கள் கூறியதாவது:
குளங்களில் நீா் வற்றும் காலங்களில் மீன் பிடிப்பது வழக்கம். ஆனால், இந்த முறை பல்வேறு தரப்பினரின் தலையீடு காரணமாக மீன் பிடிக்க அனுமதிப்பதில்லை. இதை மீன்வளத் துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. தற்போது ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இப்போது மீன்பிடிக்க வாய்ப்பு வழங்கினால்கூட மீனவா்களுக்கு பயன் கிடைக்கும் என்றனா்.