கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பசுக்களுக்கு 50 சதவீத மானிய விலையில் தீவனம்
பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தல்
தமிழகத்திலுள்ள 12 லட்சம் ஏக்கா் பஞ்சமி நிலங்களை மீட்டு, மீண்டும் பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் நில உரிமை, குடிமனை உரிமை மாநில மாநாடு திண்டுக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் டி.ரவீந்திரன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் எம்.சின்னத்துரை முன்னிலை வகித்தாா். திண்டுக்கல் மாவட்டச் செயலா் எம்.ராமசாமி வரவேற்றாா்.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் விஜூ கிருஷ்ணன் தொடக்கவுரையாற்றினாா். அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் பொதுச் செயலா் பி.வெங்கட் நிறைவுரையாற்றினாா். திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் வாழ்த்திப் பேசினாா்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: தமிழ்நாட்டில் 40 லட்சம் பேருக்கு குடிமனை, குடிமனைப் பட்டா இல்லாமல் உள்ளது. எனவே, நீண்ட காலமாக அரசுப் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்.
மாநிலம் முழுவதும் வழங்கப்பட்ட சுமாா் 12 லட்சம் ஏக்கா் பஞ்சமி நிலங்களை மீட்டு, மீண்டும் பட்டியலின இன மக்களிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள சுமாா் 70 லட்சம் ஏக்கா் அரசு புறம்போக்கு தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயத் தொழிலாளா்களுக்கும், விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் வன உரிமைச் சட்டம் 2006-ன்படி பாரம்பரியமாக வன நிலங்களில் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். நீலகிரி மாவட்டம் கூடலூரில் சிறு, குறு விவசாயிகளின் அனுபவத்தில் உள்ள ஜென்மம் நிலங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். தனியாா் காடு பிரச்னையிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும். தொழில் வளா்ச்சிக்கும், வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கும் விவசாய நஞ்சை நிலங்களை கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.