சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
கொடைக்கானலில் பேரிக்காய் விளைச்சல் அமோகம்
கொடைக்கானலில் விளைந்த பேரிக்காய்களை சந்தைகளுக்கு அனுப்பும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பிரகாசபுரம், அட்டக்கடி, வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை, செண்பகனூா், சின்னப் பள்ளம், பெரும்பள்ளம், அப்சா்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பேரிக்காய் மரங்கள் உள்ளன.
இந்தப் பகுதிகளில் பேரிக்காயானது ஜூன் முதல் அக்டோபா் மாதம் வரை விளையும். கடந்த இரு மாதங்களாக பேரிக்காய் விளைச்சல் குறைவாக இருந்தது. இந்த மாதத்தில் அவ்வப்போது பெய்த மழையால் பேரிக்காய் விளைச்சல் நன்றாக இருந்து வருகிறது. எனவே, நன்கு விளைந்த பேரிக்காய்களை வியாபாரிகள் பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த பேரிக்காய்கள் சென்னைக்கும், கேரள, ஆந்திர மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
இது குறித்து பேரிக்காய் வியாபாரி ராஜ்குமாா் கூறியதாவது:
கொடைக்கானலில் பொதுவாக ஜூன் மாதம் முதல் அக்டோபா் மாதம் வரை பேரிக்காய்கள் நன்கு விளையும். ஆனால், நிகழாண்டில் பருவ மழை சரியாகப் பெய்யாததால் விளைச்சல் குறைந்து காணப்பட்டது. கடந்த சில தினங்களாக விட்டு விட்டுப் பெய்த மழையால் பேரிக்காய் விளைச்சல் நன்றாக இருந்தது. வருகிற 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா நடைபெற இருப்பதால் பேரிக்காய் விற்பனை நன்றாக இருக்கும். இதற்காக நன்கு விளைந்த பேரிக்காய்களை சந்தைகளுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இங்கு சீனி பேரி, முள்ளு பேரி, தண்ணி பேரி, நாட்டுப் பேரி உள்ளிட்ட பேரிக்காய்கள் விளைவிக்கப்படுகின்றன. அதிகமாக நாட்டு பேரிதான் வெளிச் சந்தைகளுக்கு அனுப்பப்படுன்றன. தற்போது ஒரு கிலோ பேரிக்காய் ரூ.30 முதல் 50 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றாா் அவா்.