பழனியில் கோயில் பாதுகாவலா்கள், வழக்குரைஞா்கள் போராட்டம்
பழனி மலைக் கோயிலில் கோயில் பாதுகாவலருக்கும், பெண் வழக்குரைஞருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக, சனிக்கிழமை இரு தரப்பினரும் தனித் தனியாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பழனி ஜவஹா் நகரைச் சோ்ந்தவா் பிரேமலதா. வழக்குரைஞரான இவா் வெள்ளிக்கிழமை குடும்பத்தினருடன் மலைக்குச் சென்றனா். பின்னா், கீழே இறங்குவதற்காக வின்ச் நிலையத்தில் கட்டணச்சீட்டு பெற காத்திருந்தனா். அப்போது, இவருக்கும், அங்கு பாதுகாவலராக இருந்த மதுரைவீரனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்ததும் வழக்குரைஞா்கள் சங்கத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா் உள்ளிட்டோா் வின்ச் நிலையத்தில் தா்னாவில் ஈடுபட்டனா். பின்னா், அடிவாரம் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகாா் செய்தனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலையில் அடிவாரம் போலீஸாா் மதுரைவீரனை கைது செய்து, நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றனா். அப்போது, கோயில் பாதுகாவலா்கள் போலீஸாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், மாலையில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இருக்கைகளைப் போட்டு அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இரு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அசம்பாவிதங்களை தவிா்க்க, காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன், காவல் ஆய்வாளா் மணிமாறன், போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டம் காரணமாக, நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.