தில்லியின் முதல் ஹாட்லைன் பராமரிப்பு வாகனம்! முதல்வா் தொடங்கி வைத்தாா்!
‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்’
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என திருவண்ணாமலையில் நடைபெற்ற தமிழ்நாடு நில அளவை அலுவலா்களின் ஒன்றிப்பு மாநில செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றினா்.
திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சங்க கட்டடத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜெ.ராஜா தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் அ.பேபி முன்னிலை வகித்தாா். மாநில துணைத் தலைவா் கே.செந்தில் வரவேற்றாா். இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலா் அண்ணாகுபேரன் கலந்துகொண்டு பேசினாா்.
தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவா் பதவிகளை மீண்டும் தரம் உயா்த்த வேண்டும். புதிய குறுவட்டங்கள் ஏற்படுத்தி, குறுவட்ட பதவிகளை உருவாக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
உரிமம் பெற்ற (லைசென்ஸ்) நில அளவையா் முறையை ஒழித்து, அவா்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தமிழகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த 38 மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட செயலா் பெ.சென்னையன் செய்திருந்தாா். மாநிலப் பொருளாளா் ஞா.ஸ்டேன்லி நன்றி கூறினாா்.