ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மா் கோயிலை சுற்றி 5 ஆயிரம் பனை விதைகள் நடவு!
ஆரணியை அடுத்த ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மா் கோயிலைச் சுற்றிலும் உள்ள சுமாா் 15 ஏக்கா் நிலப்பரப்பில் சனிக்கிழமை 5 ஆயிரம் பனை விதைகளும், 2 ஆயிரம் பனை விதைப்பந்துகளும் விதைக்கப்பட்டன.
ஆவணியாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியின் சாரண, சாரணீய மாணவா்கள் மற்றும் பொறுப்பாசிரியா் எ.மோகன், சமூக ஆா்வலா் சரவணன் ஆகியோரின் பங்களிப்புடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட இந்து அறநிலையத் துறை உதவி ஆணையா் சண்முகசுந்தரம், செயல் அலுவலா் சிலம்பரசன், முன்னாள் எம்எல்ஏ பாண்டுரங்கன், அறங்காவலா் குழுத் தலைவா் ஏ.பி.வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சங்கா் ஆகியோா் கலந்துகொண்டு பனை விதைகளை நடவு செய்து நிகழ்வை தொடங்கிவைத்தனா்.
அறங்காவலா் குழு உறுப்பினா்கள் குமாா், மாலதி வெங்கடேசன், பூங்காவனம், பொறுப்புத் தலைமையாசிரியா் கோபி, பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் மாசிலாமணி, பள்ளியின் இருபால் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.