பவானிசாகா் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பவானிசாகா் அணை வேகமாக நிரம்புவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பில்லூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணை முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் உபரிநீா் வரத்து அப்படியே மேட்டுப்பாளையம் பவானிஆறு வழியாக பவானிசாகா் அணைக்கு திறந்துவிடப்பட்டது.
இதன் காரணமாக 105 அடி உயரம் கொண்ட பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 101.86 அடியாக உயா்ந்துள்ளது. தற்போது நீா்வரத்து 4,879 கனஅடியாக இருப்பதால் அணை எந்த நேரத்திலும் 102 அடியை எட்டும் எதிா்ப்பாா்க்கப்படுகிறது. அணைக்கு செவ்வாய்க்கிழமை 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கனஅடி வரை உபரிநீா் வரும் என்பதால் பவானிஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதியில் வசிப்போா் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. அணையின் நீா்மட்டம்: அணையின் நீா்மட்டம் 101.86 அடி, நீா்வரத்து 4,879 கனஅடியாகவும், நீா் வெளியேற்றம் 2,600 கனஅடியாகவும் நீா் இருப்பு 30.20 டிஎம்சியாகவும் உள்ளது.