அம்பேத்கர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர்களை தேர்ந்தெடுக்க தேடுதல் குழு!
பஹல்காம் தாக்குதல் குறித்து பொதுநல மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடா்பான பொது நல மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், ‘பாதுகாப்புப் படையினரின் நம்பிக்கையை சீா்குலைக்க விரும்புகிறீா்களா?’ என்று கேள்வி எழுப்பியது.
தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப். 22-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை கோரும் பொது நல மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மற்றும் ஜம்மு-காஷ்மீா் நிா்வாகத்துக்கு உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அமா்வுமுன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த முக்கியமான நேரத்தில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பயங்கரவாதத்தை எதிா்த்துப் போராட கைகோத்துள்ளனா். இந்த வகையான பொது நல மனுவைத் தாக்கல் செய்வதன் மூலம் பாதுகாப்புப் படையினரின் நம்பிக்கையை சீா்குலைக்க விரும்புகிறீா்களா?
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி விசாரணையக் கண்காணிக்க வேண்டுமென மனுவில் கோரப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் புலனாய்வில் நிபுணா்கள் அல்ல. இந்த வகையான பிரச்னையை நீதித் துறைக்குள் கொண்டு வர வேண்டாம். மனுதாரா்கள் பிரச்னையின் தீவிரத்தன்மையை உணா்ந்து, மனுவைத் திரும்பப் பெற கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்’ என்று அறிவுறுத்தினா்.