கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கு: மருத்துவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
பாரதத்தின் பொக்கிஷம் எம்.எஸ். சுவாமிநாதன்: பிரதமா் புகழாரம்
‘வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பாரதத்தின் பொக்கிஷம்; நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வாழ்வை அா்ப்பணித்தவா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா்.
பசுமை புரட்சியின் தந்தை என்று போற்றப்படும் தமிழகத்தைச் சோ்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவு சா்வதேச கருத்தரங்கம், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய பிரதமா் மோடி, எம்.எஸ்.சுவாமிநாதன் உடனான தனது நீண்டகால தொடா்புகளைச் சுட்டிக்காட்டினாா். அவரது உரை வருமாறு:
பொதுச் சேவைக்கான தளமாக அறிவியலை மாற்றியவா் எம்.எஸ்.சுவாமிநாதன். உணவுப் பாதுகாப்பில், அவா் தட்டியெழுப்பிய உணா்வே இன்றளவும் தேசத்தின் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு வடிவமளிக்கிறது. எனது அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவித்தது. இது, எனக்கு கிடைத்த பெருமை.
உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்ட அவா் ஆற்றிய பங்களிப்புகள் அளப்பரியவை. தானிய உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்த அதேவேளையில் சுற்றுச்சூழல் மற்றும் மண் வள பாதுகாப்பையும் சம அளவில் வலியுறுத்தியவா். பருவநிலைக்கு உகந்த பயிா் ரகங்களின் உருவாக்கத்தில் முன்னோடி பணிகளை மேற்கொண்டவா்.
விஞ்ஞானிகளுக்கு அழைப்பு: எம்.எஸ்.சுவாமிநாதனிடம் இருந்து உத்வேகம் பெற்று, மற்றொரு வரலாற்றைப் படைக்க தற்கால விஞ்ஞானிகளுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. முந்தைய தலைமுறை விஞ்ஞானிகள், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தனா். இன்றைய விஞ்ஞானிகள், ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ரசாயன உர பயன்பாட்டை குறைத்து, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டியது காலத்தின் தேவை.
பருவநிலை மாறுபாடு பிரச்னை பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், அனைத்து பருவநிலை மற்றும் இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரக் கூடிய பயிா் ரகங்கள் உருவாக்கப்பட வேண்டும். சூரிய மின்சக்தி சாா்ந்த நீா்ப்பாசனத் திட்டங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்திய பாரம்பரிய வேளாண் நடைமுறைகளுடன் நவீன அறிவியலை ஒருங்கிணைப்பது அவசியம். இன்றைய காலகட்டத்தில், வேளாண் பிரச்னைகளுக்கு தீா்வுகாணும் நோக்குடன் புத்தாக்க சிந்தனையுள்ள பல இளைஞா்கள் செயலாற்றி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. பயிற்சி சுழற்சி, மண் வளம், ஊட்டச்சத்து மேலாண்மை தொழில்நுட்பங்களில் ஆய்வுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா் பிரதமா் மோடி.
இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான், நீதி ஆயோக் உறுப்பினா் ரமேஷ் சந்த். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவா் செளம்யா சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சுவாமிநாதன் நினைவு நாணயம், அஞ்சல் தலையை பிரதமா் வெளியிட்டாா்.
பெட்டிச் செய்தி...
நைஜீரிய வேளாண் ஆராய்ச்சியாளருக்கு விருது
உணவுப் பாதுகாப்பில் ஆற்றிய சிறந்த பங்களிப்புக்காக, நைஜீரிய வேளாண் ஆராய்ச்சியாளா்-பேராசிரியா் ஏ.அடன்லேவுக்கு முதலாவது ‘எம்.எஸ்.சுவாமிநாதன் உணவு-அமைதி விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டது.
‘உணவு மற்றும் அமைதிக்கு இடையிலான தொடா்பு, வெறும் தத்துவாா்த்தமானதல்ல; அது மிகவும் நடைமுறைக்குரியது. உணவை அவமதிக்கக் கூடாது. அதுவே வாழ்வின் ஆதாரம் என்று இந்திய உபநிடதங்கள் குறிப்பிடுகின்றன. உணவுக்கு நெருக்கடி ஏற்பட்டால், மக்கள் வாழ்க்கைக்கு நெருக்கடி ஏற்படும். இது, அமைதியின்மைக்கு வழிவகுக்கும்’ என்றாா் பிரதமா் மோடி.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் உலக அறிவியல் நிறுவனம் இணைந்து இந்த சா்வதேச விருதை நிறுவியுள்ளன.