பாரத போக்குவரத்துக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
புது தில்லி: பாரத போக்குவரத்துக் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று புது தில்லியில் தொடங்கி வைத்தார். ஐந்து நாள்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான 100 புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன.
பாரத மண்டபம், தலைநகரில் உள்ள யசோபூமி மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா வர்த்தக மையம் என மூன்று இடங்களில் இந்த கண்காட்சி நடைபெறவிருக்கிறது.
பாரத மண்டபத்தில் நடைபெற்ற கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். விழாவில், மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, எச்.டி. குமாரசாமி, ஜிதன் ராம் மஞ்ஜி, மனோகர் லால், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளனர்.
ஜனவரி 17 - 22ஆம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறுகிறது. ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் முதல் வாகன உதிரி பாகங்கள், எலக்ட்ரானிக்ஸ், டையர்கள், எரிபொருள் சேமிப்புத் திறன் உற்பத்தி, ஆட்டோமோட்டிவ் மென்பொருள் நிறுவனங்கள், உதிரிபாகங்கள் மறுசுழற்சி என அனைத்தும் ஒரே குடையின் கீழ் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.