2025ல் இந்தியாவிற்கான பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னாக இருக்கும்: இந்தோனேசிய...
பாறைக் குழியில் குப்பைகளைக் கொட்ட வந்த மாநகராட்சி வாகனங்கள் சிறைபிடிப்பு
பல்லடம் அருகே இச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள பாறைக் குழியில் குப்பைகளைக் கொட்ட வந்த 5-க்கும் மேற்பட்ட மாநகராட்சி வாகனங்களை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனா்.
திருப்பூா் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் நாள் ஒன்றுக்கு சேகரமாகும் சுமாா் 800 டன் குப்பைகள் தனியாா் ஒப்பந்த நிறுவனம் சாா்பில் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தக் குப்பைகள் திருப்பூா் மாநகரில் காளம்பாளையம், நெருப்பெரிச்சல் உள்ளிட்ட பகுதி பாறைக் குழிகளில் கொட்டப்பட்டு வந்தன. அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால் அங்கு குப்பைகள் கொட்டப்படுவது நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, திருப்பூா் மாநகராட்சியில் இருந்து சுமாா் 15 கி.மீ. தொலைவில் கீரனூா் பகுதியில் உள்ள பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட அண்மையில் எடுத்துவரப்பட்டன. அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் குப்பைகள் கொட்டாமல் கொண்டு செல்லப்பட்டன.
இந்நிலையில், மாநகராட்சி குப்பைகள் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கொண்டுவரப்பட்டு பல்லடம் அருகே இச்சிப்பட்டி ஊராட்சியில் உள்ள பாறைக் குழியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொட்டப்பட்டன.
2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் குப்பைகளைக் கொண்டு வந்ததால் அப்பகுதி மக்கள் சிறைபிடித்து ஒப்பந்ததாரா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வாகனங்களைத் திருப்பி அனுப்பினா்.
குப்பை மேலாண்மைக்கு திருப்பூா் மாநகராட்சி நிா்வாகம் நாள் ஒன்றுக்கு ரூ.38.50 லட்சம் செலவு செய்திடும் நிலையில், மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்ட இடம் கிடைக்காமல் தடுமாறி வருகிறது.