பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!
பிகார் மாநிலத்தில், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் மக்கள் அனைவரும் ஏழைகள் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பிகாரில், நிகழாண்டு (2025) சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், அம்மாநிலத்தில் ராகுல் காந்தி தலைமையில், வாக்காளர் அதிகார யாத்திரை எனும் பெயரில், பேரணி நடைபெற்று வருகின்றது.
சீதாமார்ஹி பகுதியில், இன்று (ஆக.28) நடைபெற்ற பேரணியில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிகாரின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் மக்களும், ஏழைகள் மற்றும் சமூகத்தில் பின் தங்கிய மக்கள் எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் பேசியதாவது:
“பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதை நாங்கள் அம்பலப்படுத்தினோம். மகாராஷ்டிரம், கர்நாடகம் மற்றும் ஹரியாணா போன்ற மாநிலங்களில் அவர்கள் வாக்குத் திருட்டில் ஈடுபட்டனர். தற்போது, அதை பிகாரிலும் செய்ய முயல்கின்றனர். ஆனால், நாங்கள் அதை அனுமதிக்கமாட்டோம்” எனக் கூறியுள்ளார்.
மேலும், வாக்குத் திருட்டு நடைபெற்றதற்கான கூடுதல் ஆதாரங்களை வரும் மாதங்களில் வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, புகழ்பெற்ற ஜானகி கோயிலுக்குச் சென்ற ராகுல் காந்தி அங்கு சாமி தரிசனம் செய்தார். அவரது இந்தப் பேரணியில், ஹிமாசலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்க வேண்டும்: கேஜரிவால்