பின்னோக்கிச் செல்கிறது இந்தியா: ராகுல் விமர்சனம்
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாக்கள், இந்தியா பின்நோக்கிச் சென்றுகொண்டிருப்பதைக் குறிப்பதாக காங்கிரஸ் மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள், முதல்வர்கள், பிரதமரோ தொடர்ச்சியாக 30 நாள்கள் வரையில் காவலில் வைக்கப்பட்டால், 31 ஆவது நாளில் அவர்கள் தன்னிச்சையாகவே பதவிநீக்கம் செய்யப்படும் மசோதா நாடாளுமன்றத்தில் இன்று (ஆக. 20) தாக்கல் செய்யப்பட்டது.
இத்துடன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கும் மசோதா உள்ளிட்ட இரு மசோதாக்களையும் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.
இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். மசோதாவை முன்மொழியும்போது அமித் ஷா மீது மசோதாவின் நகலை குப்பையாக தூக்கி வீசி எதிர்ப்புகளை தெரிவித்தனர். எனினும், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மசோதாவை அமித் ஷா தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களுடன் ராகுல் காந்தி பேசியதாவது,
''மன்னர் தான் விரும்பும் யாரையும் நீக்கும் இடைக்காலத்துக்கு பின்னோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம். இதனால், மக்களால் தேர்வு செய்யப்பட்ட நபர் என்ற முறையே சீர்குலைக்கப்படும். அவருக்கு (பிரதமர்) உங்களைப் பிடிக்கவில்லை என்றால், அமலாக்கத் துறையை ஏவி உங்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைப்பார். பின்னர், மக்களால் தேர்வுசெய்யப்பட்ட நபர் 30 நாள்களில் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | அமைச்சர்கள், முதல்வர்கள் பதவிப்பறிப்பு! அமித் ஷா மீது தூக்கியெறியப்பட்ட மசோதா நகல்கள்!