பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்ட வழக்கறிஞர்; குஜராத் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை
பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்து கொண்ட மூத்த வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடங்கி குஜராத் உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. வழக்கறிஞரின் இந்த செயலை 'மூர்க்கத்தனம்' என குறிப்பிட்டுள்ள குஜராத் உயர் நீதிமன்றம், மூத்த வழக்கறிஞராக நீடிக்க தகுதி உள்ளதா? என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

ஜுன் 26 ஆம் தேதி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. அந்த வழக்கு விசாரணையில் கலந்து கொண்ட மூத்த வழக்கறிஞர் பாஸ்கர் தன்னா, 'பீர்' அருந்தியபடி நீதிமன்ற அமர்வுகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். பாஸ்கரது இந்த சீரற்ற செயலின் மீது நடவடிக்கை எடுத்த குஜராத் உயர் நீதிமன்றம், அவர் மீது தன்னிச்சையாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடங்கியது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஏஎஸ் சுபேஹியா மற்றும் நீதிபதி ஆர்டி வச்சானி அடங்கிய அமர்வு, வழக்கறிஞர் பாஸ்கரது செயலை 'மூர்க்கத்தனம்' என குறிப்பிட்டனர் மற்றும் ஆன்லைன் மூலம் இனிமேல் நடைபெறும் அத்தனை நீதிமன்ற அமர்விலும் கலந்து கொள்ள பாஸ்கருக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவு தலைமை நீதிபதியின் முன் தாக்கல் செய்யப்படும் எனவும், உத்தரவு அனுமதிக்கப்பட்டால் அது மற்ற நீதிமன்றங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் எனவும் குஜராத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்து குஜராத் உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், "மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, இந்த நீதிமன்ற அமர்வு முன் ஆன்லைன் வாயிலாக ஆஜராக பாஸ்கர் தன்னாவுக்கு தடை விதித்து கட்டுப்பாடு விதிக்கிறோம். தற்போதைய இந்த உத்தரவு குறித்து தலைமை நீதிபதிக்கு தெரிவிக்கப்படும். மாண்புமிகு தலைமை நீதிபதி அனுமதித்தால், இந்த உத்தரவானது பிற நீதிமன்றங்களின் முதன்மை தனியார் செயலாளர்களுக்கும் அனுப்பப்படும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

பாஸ்கரின் இந்த செயலால் மூத்த வழக்கறிஞர்களை முன்மாதிரிகளாகக் கருதும் இளைய வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுவர் என தெரிவித்த நீதிமன்ற அமர்வு, "மூத்த வழக்கறிஞர்களை முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் எடுத்துக்கொள்வது இளம் வழக்கறிஞரை சந்தேகத்திற்கு இடமின்றி பாதிக்கிறது. பாஸ்கர் இந்த நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருக்கிறார்; ஆனால், அவரது நடத்தை நீதிமன்றத்தை களங்கப்படுத்தி உள்ளது. எங்கள் கருத்துப்படி, பாஸ்கர் மூத்த வழக்கறிஞராக இருக்க தகுதி பெற்றவரா? என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என தெரிவித்தது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணைக்குள் வழக்கு குறித்து அறிக்கை தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்ற அமர்வின்போது வழக்கறிஞர் 'பீர்' குடித்து பதிவாகிய வீடியோவைப் பாதுகாக்க வேண்டும் எனவும் பதிவகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் பாஸ்கரது செயலை கண்டித்த குஜராத் உயர் நீதிமன்றம், பாஸ்கருக்கு இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பவும் பதிவகத்திற்கு உத்தரவிட்டது. மேலும், வழக்கின் அடுத்த விசாரணை இரண்டு வாரங்களுக்குப் பிறகு பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.