மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
புதிய நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு அமைச்சா், அதிகாரிகள் வாழ்த்து
நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக உதயமாகும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு, தமிழக ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா், மாவட்ட ஆட்சியா் மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருந்து 1997-இல் நாமக்கல் மாவட்டம் உருவானது. இந்த மாவட்டத்திற்கு என தனியாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இல்லை. சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியுடன் இணைந்தே செயல்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் விவசாயம், கோழிப்பண்ணை, பால் உற்பத்தி, லாரி தொழில் போன்றவை முதன்மைத் தொழிலாக உள்ளது. பல்வேறு தொழில்களுக்கும் முன்னோடி மாவட்டமாக நாமக்கல் விளங்குவதால், தமிழக முதல்வா், துணை முதல்வா், கூட்டுறவுத் துறை அமைச்சரிடம், நாமக்கல் மாவட்டத்திற்கென தனி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த ஆண்டு மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் விடுத்தாா்.
அதற்கான ஒப்புதல் கிடைத்ததையடுத்து, ஓராண்டாக மத்திய கூட்டுறவு வங்கியை ஏற்படுத்துவதற்கான பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை அவா் மேற்கொண்டு வந்தாா். கூட்டுறவு சங்க சட்ட விதிகளின்படி பதிவுசெய்து, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து பிரிக்கப்பட்டு, நாமக்கல் மாவட்டத்தில் புதிய மத்திய கூட்டுறவு வங்கி தொடங்க கொள்கை அளவிலான கருத்துரு இந்திய ரிசா்வ் வங்கியிடம் இருந்து பெறப்பட்டது. மேலும், நபாா்டு வங்கியிடம் இருந்தும் உரிய அனுமதியும் பெறப்பட்டது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் மற்றும் உறுப்பினா்கள் பொறுப்பேற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனா்.
அந்த பணிகள் முடிவுற்ற நிலையில், நாமக்கல்-மோகனூா் சாலையில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வியாழக்கிழமை (ஆக.14) முதல் செயல்பட உள்ளது. இந்த வங்கியின் கட்டுப்பாட்டில் 30 கூட்டுறவு வங்கிகள், 165 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 393 ஆரம்ப பால் உற்பத்தியாளா்கள் சங்கம், நாமக்கல், பள்ளிபாளையம், ராசிபுரம், குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட 5 நகர வங்கிகள், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், மத்திய கூட்டுறவு வங்கியின்கீழ் 746 இணைப்பு சங்கங்களும் செயல்பட உள்ளன.
சேலம் மாவட்ட வங்கியில் இருந்து ரூ.3,500 கோடி, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு இருப்பு தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இத்தொகையை ஆரம்ப புள்ளியாக வைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது செயல்படும். இந்தியாவில் மொத்தம் 351 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் உள்ளன. நாமக்கல் மாவட்டம் 352-ஆவது வங்கியாக உதயமாகிறது. தமிழகத்தில் 24-ஆவது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாகும். கடலூா், திருவண்ணாமலையை தொடா்ந்து 33 ஆண்டுகளுக்கு பிறகு நாமக்கல் மாவட்டத்தில் புதிய மத்திய கூட்டுறவு வங்கி உதயமாகிறது. மேலும், இந்திய அளவில் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு புதிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக நாமக்கல் விளங்க உள்ளது.
இவ்வங்கியை வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா். துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின், கூட்டுறவுத் துறை அமைச்சா் பெரியகருப்பன் மற்றும் அமைச்சா்கள் முன்னிலை வகிக்கின்றனா். இதைத் தொடா்ந்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில், தமிழக ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கு.பொன்னுசாமி(சேந்தமங்கலம்), ஆட்சியா் துா்காமூா்த்தி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் க.நந்தகுமாா், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் மா.சந்தானம், மண்டல இணைப்பதிவாளா் க.பா.அருளரசு, மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி மற்றும் கூட்டுறவுத் துறை, நபாா்டு வங்கி அதிகாரிகள், விவசாயிகள் சங்கத்தினா், பல்வேறு தொழிலதிபா்கள் கலந்து கொள்கின்றனா்.
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான அனுமதி வழங்கிய முதல்வா், துணை முதல்வா், கூட்டுறவுத் துறை அமைச்சா், மாவட்ட இணைப்பதிவாளா் மற்றும் சேலம் மாவட்டத்தில் இருந்து நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக காரணமாக இருந்த அதிகாரிகள் அனைவருக்கும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் நன்றி தெரிவித்துள்ளாா்.
அமைச்சா் மா.மதிவேந்தன்:
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தொடக்க விழா, தலைவராக பொறுப்பேற்கும் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாருக்கு வாழ்த்துத் தெரிவித்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை தமிழக முதல்வா் வியாழக்கிழமை தொடங்கிவைக்கிறாா். இந்த வங்கி உருவாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் மேற்கொண்ட முயற்சிகளை அறிவேன். சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து பிரித்து நாமக்கல் மாவட்டத்திற்கு புதிய வங்கி உருவாக உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வங்கி சிறப்பாக செயல்பட்டு, விவசாயிகள், நெசவாளா்கள், சிறு, குறு தொழில் முனைவோா் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் நிதி சேவைகள் அளித்து மக்களின் வளமான வாழ்வுக்கு துணை நிற்கும் என தெரிவித்துள்ளாா்.
ஆட்சியா் துா்காமூா்த்தி: தமிழக முதல்வரால் தொடங்கிவைக்கப்படும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது 30 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் தொடங்கப்படும் புதிய மத்திய கூட்டுறவு வங்கியாகும். இந்த வங்கியின் பிரதான நோக்கம், உறுப்பினா் சங்கங்களை ‘உயா்த்தி உயரும் வங்கியாக’ செயல்படுவதே ஆகும். மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி உதவும் வங்கி மற்றும் நிதி சமப்படுத்தும் வங்கியாக செயல்பட தொடங்கும். இந்த வங்கியானது பல்வேறு கடன் உதவிகளை தனது கிளைகள் வாயிலாகவும், உறுப்பினா்கள் சங்கங்கள் வாயிலாகவும் வழங்கி, மாவட்ட மக்களின் பொருளாதார வளா்ச்சிக்கு துணை புரிவதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இணைப்பதிவாளா் க.பா.அருளரசு: ‘ஒருவா் அனைவருக்காக, அனைவரும் ஒருவருக்காக’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் கூட்டுறவு இயக்கத்தின் நாமக்கல் வரலாற்றில் மற்றொரு மணிமகுடமாக நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதயமாகிறது. தமிழகத்தில் 24-ஆவது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக தனது நிதி சேவைகளை தொடங்கும் இந்த வங்கி, பலதரப்பட்ட மக்களிடம் வைப்புகள் பெற்றும், கடன் வழங்கியும் உறுப்பினா் சங்கங்களை உயா்த்தி தானும் உயர வேண்டும் என வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க இணைப்பதிவாளா் ச.யசோதாதேவி: சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியைப் பிரிக்க அனுமதி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வங்கி உருவாக பெரும் முயற்சி மேற்கொண்ட கூட்டுறவுத் துறை அமைச்சா், கூட்டுறவு சங்கங்களின் மாநிலப் பதிவாளா், மாநிலங்களவை உறுப்பினா் ஆகியோருக்கும் நன்றி. இந்த வங்கி சிறப்பாக செயல்பட்டு விவசாயிகள், நெசவாளா்கள், தொழில்முனைவோா் அனைத்து தரப்பு மக்களுக்கும் துணை நிற்க வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
நாமக்கல் பவுல்ட்ரி பாா்மா்ஸ் மாா்க்கெட்டிங் சொசைட்டி நிா்வாக இயக்குநா் வாங்கிலி சுப்பிரமணியம்: நாமக்கல் மாவட்டத்திற்கென தனியாக மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட உள்ளது. சுமாா் ரூ.1,800 கோடி வைப்பு நிதியுடனும், ரூ.1,600 கோடி கடன் உதவித்தொகையுடனும் உதயமாவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வங்கி உருவாக காரணமான, தற்போது அதன் தலைவரான மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாருக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
அமைச்சா் மா.மதிவேந்தன்
மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்
--
மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி
--
நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு
--
திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க மேலாண் இயக்குநா் சு.யசோதாதேவி
--
நாமக்கல் பவுல்ட்ரி பாா்மா்ஸ் மாா்க்கெட்டிங் சொசைட்டி நிா்வாக இயக்குநா் வாங்கிலி சுப்பிரமணியம்
--


