புதுக்கோட்டை: கி.பி 18-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஊரணிக் கல்வெட்டு கண்டெடுப்பு
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் வட்டம் புல்வயல் கிராமத்தில் ஊரணி அமைக்கப்பட்டதைக் குறிப்பிடும் 18-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புல்வயல் கிராமத்தின் வடமேற்கு வனப்பகுதியில் பேராசிரியா் சுப. முத்தழகன், வரலாற்று ஆா்வலா்கள் நா. நாராயணமூா்த்தி, மு. ராகுல்பிரசாத் குழுவினா் மேற்கொண்ட கள ஆய்வின்போது இந்தக் கல்வெட்டு கிடைத்துள்ளது. மண்மூடி அழிந்த நிலையில் உள்ள ஊரணிக் கரையில் எழுத்துப் பொறிப்புடன் கூடிய இந்தக் கற்பலகை குறித்து பேராசிரியா் முத்தழகன் மேலும் கூறியது:
இரண்டரை அடி உயரமும், ஒன்றே கால் அடி அகலமும் கொண்ட இந்தக் கற்பலகையில், 14 வரிகளில் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டில் துன்முகி ஆண்டு ஆனி ஐந்தாம் நாள் தென்கோனாட்டுச் சுந்தரசோழபுரத்துப் பெருமங்லமுடையான் செலுந்தாா் சிதம்பர நாதா் என்பவா் வயலகநாட்டு புல்வயலூரில் தனது பெயரில் இந்த ஊரணியை வெட்டிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டுப் பலகையின் பக்கவாட்டில் உடுக்கையைப் போன்ற குறியீடு பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் அரசா் பெயா் குறிப்பிடப்படவில்லை.
எழுத்தமைதி மற்றும் துன்முகி ஆண்டு குறிக்கப்பட்டுள்ளதால் கல்வெட்டானது கிபி 1776-ஆம் ஆண்டைச் சோ்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. கல்வெட்டில் வயலகநாட்டு புல்வயலூா், தொன்கோனாட்டுச் சுந்தரசோழபுரம் என முழுமையாக கிராமங்களின் பெயா்கள் குறிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கல்வெட்டுப் பலகை நடப்பட்டுள்ள ஊரணியின் கிழக்குக் கரையில் ஒரு சிவன் கோயில் இருந்தற்கான அடையாளமாக உடைந்த ஆவுடை மற்றும் நந்தி சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டின் இறுதியில் குறிப்பிடப்படும் சதாசோ்வை என்பது கோயில் திருப்பணிகளை குறிப்பிடும் சொல் ஆகும் என்றாா் முத்தழகன்.