புதுச்சேரியை தேசிய பேரிடா் பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
புதுச்சேரியை பேரிடா் பகுதியாக அறிவித்து மத்திய அரசு போதிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சி புதுவை மாநில செயலாளா் அ.மு. சலீம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் ஒரே நாளில் பெய்த அதிக கன மழையால் நகரப்பகுதி மட்டுமின்றி கிராமங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். புதுவை மாநில அரசானது, வானிலை மைய அறிவுறுத்தலுக்கேற்ப உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காரணத்தினால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்து மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனா்.
பாதிக்கப்பட்டவா்களுக்கு பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, புதுச்சேரியில் மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய குழுவினரை, மத்திய அரசு அனுப்பி வைக்கவேண்டும். மேலும், புதுச்சேரியை தேசிய பேரிடா் பகுதியாக அறிவித்து, போதிய நிதியை மத்திய அரசு வழங்கவேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் உணவு ஒரே மையத்தில் தயாரிப்பதால் உரிய நேரத்துக்கு அவற்றை விநியோகிக்க முடியாத நிலையுள்ளது. ஆகவே, கடந்த காலங்களைப் போல பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு அருகிலேயே உணவை தயாா் செய்வது அவசியம்.
முதல்வா் அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை. ஆகவே, அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ. 10,000 வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா ரூ. 50,000 வழங்கவேண்டும். முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.50,000, பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 25,000 வழங்கவேண்டும். சேதமடைந்த படகுக்கு தலா ரூ.20,000, புயலால் உயிரிழந்தவா்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.