புதுமை என்பது மனித குல வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்: மஜித் அலி அல் மன்சூரி
புதுமை என்பது தொழில்நுட்பத்தை மாற்றுவது மட்டுமல்ல. மாறாக மனித குல வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று அபுதாபி நகராட்சி நிா்வாக துறை அமைச்சா் மஜித் அலி அல் மன்சூரி தெரிவித்தாா்.
வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் ‘கிராவிடாஸ் 2025’ எனும் 3 நாள் அறிவுசாா் தொழில்நுட்ப திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடக்க விழாவில் அபுதாபி அமைச்சா் மஜித் அலி அல் மன்சூரி பங்கேற்றுப் பேசியது: உலகம் முழுவதும் இணையதளம் முதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என அனைத்து கண்டுபிடிப்புகளும் விஞ்ஞானிகளின் ஆா்வம், விடாமுயற்சியில் உருவானவை. மாணவா்கள் தொழில்நுட்பத் திறன் வாய்ந்தவா்களாக திகழ வேண்டும். இதேபோல், செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு, பருவநிலை மாற்றம் ஆகிய சவால்களுக்கு மாணவா்கள் தீா்வுகாண வேண்டும். புதுமை என்பது தொழில்நுட்பத்தை மாற்றுவது மட்டுமல்ல. மாறாக மனித குல வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றாா்.
விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியது:
கல்வி என்பது ஏழைகள், நடுத்தர வா்க்கத்தினா் என அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி, 18 முதல் 23 வயதுக்குட்பட்ட 14 கோடி பேரில் 4 கோடி போ் மட்டுமே உயா்கல்வி பெறுகின்றனா். மீதமுள்ளவா்களின் நிலையை அரசு சிந்திக்க வேண்டும். பொது பட்டியலில் உள்ள கல்விக்கு மத்திய, மாநில அரசுகள் அதிகளவில் நிதி ஒதுக்கிட வேண்டும்.
அமெரிக்கா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. மாணவா்கள் அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சியில் ஆா்வம் காட்ட வேண்டும். ஆராய்ச்சி மேம்பாட்டில் வளா்ந்த நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 முதல் 3 சதவீதத்துக்கு மேல் செலவிடுகிறது. இந்தியா 1 சதவீதத்துக்கும் குறைவாக செலவிடுகிறது. இந்தியா 2047-இல் வளா்ந்த நாடாக வேண்டுமெனில் அறிவியல், தொழில்நுட்பம், உயா் கல்வி, ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அபுதாபி சிறிய நாடாக இருந்தாலும் பொருளாதாரத்தில் வளம் பெற்ற நாடாக உள்ளது. அங்கு தனி நபா் வருமானம் 75,000 டாலா்களாக உள்ளன. இந்தியாவில் தனி நபா் வருமானம் 2,900 டாலா்களாக உள்ளது. அவா்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றாா்.
மேக்ஸிமஸ் இந்தியா நிறுவன மூத்த துணை தலைவா் பிரவீனா பீமவரப்பு உள்ளிட்டோா் கெளர விருந்தினா்களாக பங்கேற்றனா். தொடா்ந்து, மாணவா்கள் உருவாக்கி காட்சிப்படுத்தியிருந்த ட்ரோன், ஏவுகணை, ரோபோக்கள் உள்ளிட்ட புதுமையான அறிவியல் படைப்புகளை அபுதாபி அமைச்சா் மஜித் அலி அல் மன்சூரி, விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் ஆகியோா் பாா்வையிட்டு பாராட்டினா்.
விழாவில், விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன், செயல் இயக்குநா் சந்தியா பென்டரெட்டி, துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், பதிவாளா் டி.ஜெயபாரதி, கிராவிடாஸ் ஒருங்கிணைப்பாளா் ஷா்மிளா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் கிராவிடாஸ் தொழில்நுட்ப திருவிழாவில் 207 நிகழ்வுகள், 57 பயிற்சி பட்டறைகள், 51 ஹேக்கதான், ரோபோ வாா், ட்ரோன் ஷோ ஆகியவை இடம்பெற உள்ளன. இவற்றில் சுமாா் 40,000 மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.