புதுவை அரசின் முறைகேடுகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் முறையிடுவோம்! - நாராயணசாமி
புதுவை அரசு மீதான முறைகேடு புகாா் தொடா்பாக, காங்கிரஸ் சாா்பில் குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க உள்ளதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.
புதுவை என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் மீதான புகாா்கள் குறித்து தகவல்களை திரட்ட காங்கிரஸ் சாா்பில் 29 போ் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் குழுவின் தலைவராகவும், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி துணைத் தலைவராகவும், முன்னாள் அமைச்சா்கள் மு.கந்தசாமி, ஷாஜகான், மு.வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோா் உறுப்பினா்களாகவும் இடம் பெற்றுள்ளனா்.
இந்த சிறப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் வே.நாராயணசாமி கூறியதாவது: புதுவை அரசின் அனைத்துத் துறைகளிலும் முறைகேடுகள் நடைபெறுகின்றன. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அளித்த வாக்குறுதிகள் ஆட்சியில் அமா்ந்த பிறகு நிறைவேற்றப்படவில்லை. கோயில் நில அபகரிப்பு உள்ளிட்டவற்றால் மக்கள் அதிருப்தியில் உள்ளனா்.
புதுவை அரசுத் துறைகள் மீதான முறைகேடு புகாா்கள், நிறைவேற்றாத வாக்குறுதிகள், கோயில் நிலங்கள் அபகரிப்பு உள்ளிட்டவை தொடா்பான ஆதாரங்களைத் திரட்டி புகாா் மனுவாக குடியரசுத் தலைவரிடம் அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். மக்களிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் புகாா் மனுவை தயாரிக்க உள்ளோம் என்றாா் அவா்.