புலியூா் சமத்துவபுரத்துக்கு அரசுப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை
கரூரை அடுத்த புலியூா் சமத்துவபுரத்துக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புலியூா் பேரூராட்சி, 4-ஆவது வாா்டில் உள்ள சமத்துவபுரத்தில் சுமாா் 100 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதிகளில் வசிப்பவா்களில் பெரும்பாலானோா் கரூா் நகரில் செயல்படும் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனங்கள், கொசு வலை உற்பத்தி நிறுவனங்களில் கூலித்தொழிலாளா்களாக பணியாற்றி வருகிறாா்கள்.
மேலும், சிலா் கட்டடத் தொழிலாளா்களாகவும் உள்ளனா். இவா்களில் பெரும்பான்மையானோா் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் வேலைக்கு செல்பவா்கள். ஆனால், சமத்துவபுரத்துக்கு பேருந்துகள் இல்லாததால் சுமாா் இரண்டரை கி.மீ. தொலைவுக்கு நடந்தே சென்று புலியூா் பேருந்து நிறுத்தம் சென்று கரூா் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வருகிறாா்கள்.
எனவே, கரூரில் இருந்து புலியூா் சமத்துவபுரம் பகுதிக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக அந்த பகுதி வாா்டு உறுப்பினா் ப.விஜயகுமாா் கூறுகையில்,
சமத்துவபுரத்தைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோா் புலியூா் கவுண்டம்பாளையத்தில் செயல்படும் அரசு பள்ளியில்தான் படித்து வருகிறாா்கள். சமத்துவபுரத்துக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமாா் 2.5 கி.மீ. தொலைவு உள்ள புலியூா் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து பின்னா் பள்ளி, கல்லூரிகளுக்கு பேருந்துகளில் சென்றுவருகிறாா்கள். மேலும், இரவு நேரங்களில் பெண் தொழிலாளா்களும், மாணவிகளும் நடந்துதான் சமத்துவபுரத்துக்கு செல்ல வேண்டியுள்ளது.
எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள், பெண் தொழிலாளா்களின் நலன்கருதி சமத்துவபுரத்துக்கு அரசு பேருந்துகள் இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.