பெண்களுக்கு மாதம் ரூ.2,100 வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதா?கேஜரிவாலுக்கு வீரேந்திர சச்தேவா கேள்வி
தில்லி பெண்களுக்கு மாதந்தோறும் மகிளா சம்மான் திட்டத்தின் கீழ் ரூ.2,100 வழங்குவதற்கான அமைச்சரவைப் பரிந்துரை நிறைவேற்றப்பட்டதா, இல்லையா என்பதற்கு அரவிந்த் கேஜரிவால் பதிலளிக்க வேண்டும் என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மகிளா சம்மான் யோஜனா என்ற போலிப் பெயரில் பெண்களிடம் இருந்து தரவுகளைத் சேகரித்து, அதைத் தனியாா் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை விசாரிக்க துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா உத்தரவு பிறப்பித்துள்ளாா். இந்த நடவடிக்கையை பாஜக சாா்பில் வரவேற்கிறேன். இந்த விவகாரம் தொடா்பான மேலதிக விசாரணைக்கு பாஜக அதன் ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராகவுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளாக தில்லி மக்களுக்கு கேஜரிவால் பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வருகிறாா். ‘முதல்வா் மகிளா சம்மான் யோஜனா’ திட்டத்தின் கீழ் மாதம் தோறும் ₹பெண்களுக்கு ரூ.2,100 வழங்க அமைச்சரவை முன்மொழிவு எப்போதாவது நிறைவேற்றப்பட்டதா?. பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு அமைவதற்கு முன், அங்குள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என கேஜரிவால் வாக்குறுதி அளித்திருந்தாா். ஆட்சி அமைத்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரையில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில், தில்லி மக்களுக்கு மீண்டும், மீண்டும் கேஜரிவால் வஞ்சகம் செய்வது இனி பலிக்காது. தில்லி அரசு எந்தவொரு தெளிவும் இல்லாமல் பெண்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கிறது. அதே நேரத்தில், இத்திட்டத்திற்கான அமைச்சரவை குறிப்பு வெளியிடப்பட்டதா என்று முதல்வா் அதிஷிக்கே உறுதியாகத் தெரியவில்லை. மேலும், கேஜரிவால் பெண்களின் பிரச்னைகளை தோ்தல் ஆதாயங்களுக்காக மட்டுமே பயன்படுத்துகிறாா். அவா், பெண்களுக்கு ஆதரவான திட்டங்களை அமைதியாகவும், திறம்படவும் எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து பாஜக ஆளும் மாநிலங்களிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
சத்தீஸ்கரில் ‘மகாதாரி சக்தி ரின் யோஜனா’, மத்தியப் பிரதேசத்தில் ‘லாட்லி யோஜனா’, ஹரியாணாவில் ‘லடோ’ மற்றும் மகாராஷ்டிராவில் ‘லட்லி பஹ்னா யோஜனா’ போன்ற வெற்றிகரமான முயற்சிகளை பாஜக சாத்தியப்படுத்தியுள்ளது.
அந்த வகையில், தில்லியில் விரைவில் பாஜக ஆட்சியமைத்து, பெண்களை உண்மையிலேயே மதிக்கவும், மேம்படுத்தவும் பாடுபடும். அரசியல் பழிவாங்கல் காரணமாக தில்லி மக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் செயல்படுத்துவதை கேஜரிவால் தடுத்தாா். சேதமடைந்த சாலைகள், மாசுபட்ட நீா், ஊழல் திட்டங்கள், நிரம்பி வழியும் கழிவுநீா் ஆகியவை மட்டுமே தில்லிக்கு கேஜரிவால் அரசால் வழங்கப்படுகிறது.
தில்லி பெண்களுக்கு எதிராக ஏதேனும் சைபா் குற்றம் நடந்தால், மகிளா சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் அவா்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து, தனிப்பட்ட நபா்களுக்கு அனுப்பும் முழு பொறுப்பும் கேஜரிவால் மீது விழும்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் உதவி என்ற போா்வையில் பெண்களுடைய வங்கி விவரங்களையும் சேகரித்து, பெரிய
அளவிலான டிஜிட்டல் மோசடிக்கு ஆயத்தம் செய்கின்றனா் என்றாா் வீரேந்திர சச்தேவா.