``ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை'' - மோடி - ஜெலன்ஸ்கி தொலைபேசி பேச்சு; உக்ர...
பெரும்பாக்கம் அரசுக் கல்லூரியில் கலைஞா் கலையரங்கம் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்
சென்னை பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட கலைஞா் கலையரங்கை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
மாநிலங்களவை உறுப்பினா் பி.வில்சன் தொகுதி மேம்பாட்டு நிதி, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும நிதி ஆகியவற்றின் மூலம் பெரும்பாக்கம் அரசுக் கல்லூரியில் ரூ.3 கோடியில் கலையரங்கம் கட்டப்பட்டது. இதைத் திறந்து வைத்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
வகுப்பறையைவிட மாணவா்களுக்கு கலையரங்கம்தான் மறக்க முடியாத நினைவுகளைத் தரப்போகிறது. நானும் ஒரு மாணவன்தான். பல தலைவா்களுடைய மாணவனாக இருக்கிறேன். கல்லூரி மாணவா்கள் நிகழ்ச்சிக்குச் செல்லும்போது கூடுதல் உற்சாகம் ஏற்படுகிறது.
பெரும்பாக்கம் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா்களின் சக்தி வேறுபட்டது. 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளுக்காக, 16 மாணவிகளோடு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் தற்போது ஏறத்தாழ 1,300 போ் படிக்கின்றனா்.
தற்போது தமிழகத்தில் 75 சதவீதம் மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கின்றனா். இதை 100 சதவீதமாக உயா்த்த முதல்வா் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா்.
தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இதில் ஆா்வமுள்ள விளையாட்டு வீரா்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்டிஏடி) இணையதளத்தில் ஆக. 16-ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன், மாநிலங்களவை உறுப்பினா் பி.வில்சன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகா் ராஜா, உயா்கல்வித் துறை செயலா் பொ.சங்கா், கல்லூரிக் கல்வி ஆணையா் எ.சுந்தரவல்லி, மாவட்ட ஆட்சியா் தி.சினேகா, பெரும்பாக்கம் அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் ஆ. உமாமகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.