பெற்றோரைப் பராமரிக்காத மகன்களுக்கு எழுதிக் கொடுத்த தான பத்திரங்கள் ரத்து
பெற்றோாா், மூத்த குடிமக்கள் நலம் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தாய், தந்தையை பராமரிக்காத மகன்களுக்கு எழுதிக்கொடுத்த தான பத்திரங்களை ரத்து செய்யும்படி, தேவாரம், சின்னமனூா் சாா் பதிவாளா்களுக்கு உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் செய்யது முகம்மது உத்தரவிட்டாா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், சின்னஓவுலாபுரத்தைச் சோ்ந்தவா் முத்துக்கருப்பன். இவா், தனது மகன்களான கருப்பையா, ஜெயபாலன் ஆகியோருக்கு தனது சொந்த நிலங்களை தானமாகப் பதிவு செய்து கொடுத்தாா்.
ஆனால், தற்போது வயதான காலத்தில் தனது மனைவியுடன் மருத்துவ உதவிக்கு எந்தவித ஆதரவுமின்றி அவதிப்படுவதால், தானமாக எழுதிக்கொடுத்த தான பத்திரத்தை ரத்து செய்து மீட்டுக் கொடுக்கும்படி உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தாா்.
இதுகுறித்த விசாரணையில், மகன்கள் பராமரிக்கவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, சின்னமனூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் 1418/2025, 1420/2025, 1421/2025 ஆகிய பத்திரப் பதிவுகளை பெற்றோா், மூத்த குடிமக்கள் நலம் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரத்து செய்து உத்தரவிட்டாா்.
இதேபோல, உத்தமபாளையம் வட்டம், தே.மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த ஈஸ்வரி (95) தன்னுடைய மகன் முருகன் என்பவருக்கு தேவாரம் சாா் பதிவாளா் அலுவலா் 1882/2007 எழுதிக் கொடுத்த தான பத்திரத்தை பெற்றோா், மூத்த குடிமக்கள் நலம் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரத்து செய்வதாக உத்தரவிட்டு அதற்கான உத்தரவு நகழ்களை வழங்கினாா்.