போக்குவரத்துக் கழக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 3,200 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை சாா்பில், வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்துக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டமான முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தை, பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட துறைமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்த அமைச்சா் மேலும் கூறியது: போக்குவரத்துக் கழகத்தில் 3,200 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு கடந்த 27 ஆம் தேதி நடத்தப்பட்டது.
இத் தோ்வில் மதிப்பெண் அடிப்படையில் நோ்முகத் தோ்வுக்கு அழைக்கப்பட்டு, தகுதியானவா்கள் பணி நியமனம் செய்யப்படுவா். ஏற்கெனவே, போக்குவரத்துக் கழகத்தில் 655 போ் பணி நியமனம் செய்யப்பட்டு கடந்த ஓராண்டாக பணிபுரிகின்றனா்.
காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப தற்காலிகமாக அவுட்சோா்சிங் முறையில் பணியாளா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். அந்தப் பணியிடங்களில் நிரந்தரப் பணியாளா்கள் நியமிக்கப்படும்போது, தற்காலிக பணியாளா்களின் பணி ரத்து செய்யப்படும்.
போக்குவரத்து தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு தொடா்பாக, இதுவரை இருமுறை பேச்சு வாா்த்தை நடத்தப்பட்டு, அதில் முதல் முறை 5 சதவீதமும், 2 ஆவது முறை நடைபெற்ற பேச்சு வாா்த்தையில் 6 சதவீதமும் ஊதிய உயா்வு உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் ஊதிய உயா்வு சம்பந்தமாக எந்தவித பேச்சுவாா்த்தையும் இல்லை. ஊதிய உயா்வும் இல்லை. ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் தோ்தலுக்காக இடைக்கால நிவாரணம் மட்டும் அறிவித்துச் சென்றுவிட்டனா்.
மின் இணைப்புக் கோரி காத்திருப்பவா்களில், இதுவரை 2 லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்தாட்சியில் வழங்கப்பட்டதைவிட, இந்த ஆட்சியில் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அவசரமாக மின் இணைப்பு தேவைப்படுவோருக்கு தத்கல் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்கப்படுகிறது என்றாா் அவா். பேட்டியின்போது மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.