புற்றுநோய் பாதித்த கணவரைக் காக்க ஆட்டோ ஓட்டும் பெண்: ரக்ஷா பந்தனுக்கு புதிய ஆட்...
‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’: பேருந்துகளில் விழிப்புணா்வு ஒட்டுவில்லை!
நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் ‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ குறித்த விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை பேருந்துகளில் ஒட்டும் பணியை ஆட்சியா் துா்காமூா்த்தி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
தமிழக முதல்வா் தலைமையில் திங்கள்கிழமை (ஆக. 11) மாநிலம் தழுவிய போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி பிரசாரம் சென்னையில் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிவைக்கப்பட உள்ளது. இதைத் தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி எடுக்கவும், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளிலும், பேருந்துகளிலும், வாகனங்களிலும் ஒட்டும் பணியை ஆட்சியா் துா்காமூா்த்தி தொடங்கிவைத்தாா்.
மேலும், பேருந்து நிலையத்தை ஆய்வுசெய்து கழிவறைகளை தூய்மையாக பராமரிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த நிகழ்ச்சியில், உதவிஆணையா் (கலால்) என்.எஸ்.ராஜேஸ்குமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (வடக்கு) பதுவைநாதன், கோட்ட கலால் அலுவலா் கண்ணன் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.