இந்திய வானில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை நீட்டிப்பு!
போதைப் பொருள் விழிப்புணா்வுப் பணியில் சிறப்பிடம்: நாமக்கல் அரசு கலைக் கல்லூரிக்கு பாராட்டு
நாமக்கல்: போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு தன்னாா்வக் குழுக்களின் செயல்பாடுகளுக்காக மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற நாமக்கல் அரசு கலைக் கல்லூரிக்கு மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி பாராட்டு தெரிவித்தாா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. இதில், முதியோா் உதவித்தொகை, விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 481 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினா். அவற்றை பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 10 பேருக்கு ரூ. 70,958 மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
மேலும், கடந்த 1-ஆம் தேதி சென்னையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரிக்கு, மாநில அளவில் சிறந்த போதைப் பொருள் எதிா்ப்பு தன்னாா்வ குழுக்களின் செயல்பாடுகளுக்காக 2024-25-ஆம் ஆண்டுக்கான நாமக்கல் மாவட்ட அளவில் முதல் பரிசும், மாநில அளவில் மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, அறிஞா் அண்ணா அரசு கல்லூரி நிா்வாகத்தினா், தாங்கள் பெற்ற கேடயம், சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை ரூ. 50 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், உதவி ஆணையா் (கலால்) என்.எஸ்.ராஜேஷ்குமாா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ்.கலைச்செல்வி, அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வா் மு.ராஜேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.